பக்கம் எண் :

 7

அல்லது ‘வாரி வயலார் விருந்து’ என்ற தலைப்பில் ‘புதுவை முரசு’ இதழில் பாரதிதாசன் ஒரு நெடுங்கதை எழுதி யிருப்பது அறிய முடிகிறது. எனினும் இக்கதை நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ‘எல்லோரும் உறவினர்கள்’ என்ற தலைப்பிலும் ஒரு முடிவுறாத தொடர்கதையைக் ‘குயில்’ இதழில் எழுதியிருப்பதும் ஈண்டு கருதத்தகும்.

எல்லாப் படைப்புத் துறைகளையும் கருத்துகளை வெளியிடுவதற்கு உரிய கருவிகளாகவே பாரதிதாசன் கருதியுள்ளார். இந்நூலிலுள்ள சிறுகதைகளும் ஒளிவு மறைவின்றிப் பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகளைச் சமுதாயம் முழுவதற்கும் பயன்படும் முறையில் வற்புறுத்திக் கூறுகின்றன.

“இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சிமனப் பான்மை
ஏற்படுத்தல், பிறர்க்குழைத்தல் எழுத்தாளர் கடன்”

(தொகுதி 2. பக்-109)

என்று மற்ற எழுத்தாளர்களுக்கு ஆற்றுப்படுத்தியதற்குப் பொருந்தவே, அதற்குத் தானும் ஒர் எடுத்துக்காட்டாகப் பாரதிதாசன் இச்சிறுகதைப் படைப்புகளால் விளங்குகிறார். இத்தொகுப்பில் முப்பத்திரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

பாரதிதாசன் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று அவற்றைப் பிறர்க்குக் கற்பிக்கின்ற தமிழாசிரியர் தொழில் செய்தவர். அதனால் அவர் கதைகளில் தமிழாசிரியரின் தன்மைக்கு ஏற்ற முறையில் பல பாடல்களுக்கு உரை விளக்கமும் செய்துள்ளார். ‘பாலனைப் பழித்தல்’, ‘தமிழ்ப்பெண் மனப்பான்மை’ என்ற கதைகளில் இவ்வாறான உரை விளக்கங்கள் நிறைந்துள்ளன.

பாரதிதாசன் படித்த புலவராக மட்டுமல்லாமல் உணர்ச்சி பொங்குதலால் எழுச்சிபெறப் படைக்கும் கவிஞராகவும் இலங்கியமையால் சில கதைகளை வருணனை நயம் விரிவாகத் தோன்ற எழுதிச் சென்றுள்ளார்.