என்று நினைத்தோம், அவர்களில் சிலர் எம்மை நெருங்கினர். ஏதோ சொல்லினர். அர்த்தம் புரியவில்லை. நாங்கள் அதற்கு விடையாக-வானத்தைக் காட்டினோம். கைச்சாடைகள் வளர்ந்தன. ஊமை நாடகம் நடந்தது. எங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்ற விஷயத்தை நாங்கள் சீக்கிரம் தெரிந்து கொண்டோம், நாங்கள் கொஞ்ச நேரத்தின் பின் மெதுவாய் எங்கள் தலையில் ஏற்றப்பட்ட கற்களைக் கீழே இறக்கினோம். அதற்காக அவர்கள் எம்மைக் கோபிக்கவில்லை. இதனால் நாங்கள் வானத்திலிருந்து செவ்வாயுலகத்துக்கு வந்தோம் என்று குறிப்பிட்டதை அவர்கள் ஒருவாறு கண்டறிந்து கொண்டார்கள் என்று நிச்சயித்தோம். பிறகு அவர்கள் எங்களை உணவு அருந்தச் சொன்னார்கள். சில விதப் பழங்கள் பலவிதக் கிழங்குகள் தந்தார்கள். புசித்தோம்; ஒருவித ருசியாய் இருந்தன. இரண்டு மூன்று நாட்கள் சென்றன. எங்கள் ஆகாய விமானத்தின் உபயோகத்தை நாங்கள் காட்டினோம். எங்களிடம் அவர்கள் பக்தி விசுவாசங் காட்ட ஆரம்பித்தார்கள். ஆனாலும், நாங்கள் கல் சுமக்காதிருந்தது பற்றி அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை; இவ்விதம் இரண்டு மாதங்கள் தீர்ந்தன. நாங்கள் அவர்கள் பேச்சை அறிய ஆரம்பித்தோம். அவர்களும் நாங்கள் பேசுவதைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். செவ்வாயுலக மக்கள் கல்லைச் சுமந்து கொண்டிருக்க என்ன காரணம்?-நூதனமான காரணம் ஒன்றுமில்லை. அது கடவுள் ஏற்பாடு என்று அவர்கள் சொன்னார்கள். அந்த ஏற்பாட்டை வற்புறுத்தும் இதிகாசங்கள், புராணங்கள், மற்றும் சாஸ்திரங்கள் எல்லாம் சொன்னார்கள். ஆகக்கூடி கல்லைச் சுமப்பது கடவுள் ஏற்பாடு. சிரிப்பைத்தான் எம்மால் அடக்க |