பக்கம் எண் :

86ஏழைகள்

இவ்வாறு ஒரு மணி நேரம் சென்றது. ஆறரை மணி ஆயிற்றென்று, பொன்னி சிற்றுணவு பரிமாறிச் சிரித்து நின்றாள். மயில்களும், குயில்களும், மான்களும், கிளிகளும் வரிசையில் குந்தின. என்ன, மகளிர் அனைவரும் வரிசையில் குந்தி உண்ணலாயினர்.

மல்லிகை சொன்னாள் : மறுநாள் பாஞ்சாலி திருமணத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் என்று. இந்த பேச்சு எடுக்கவில்லை.

அஞ்சிலை சொன்னாள் : ‘நாளைக்கு அமாவாசையாதலால் கடலிற் குளிக்கலாமா’ என்று. ‘சுறாமீன் தொல்லை ஆதலால் வீட்டில் குளிப்பது மிக நன்று’ என்றாள் பச்சையம்மாள். இவ்வாறே பலர் பல சொன்னார்கள். ஆனால் ஒருமுகம் நட்டபடி இருந்தது. ‘அங்கயற்கண்ணி ஏன் அழவும் இல்லை, சிரிக்கவும் இல்லை, பேசவும் இல்லை, பாடவுமில்லை, என்று முத்தம்மாள் கேட்டாள்.

அனைவரும் அந்தக் கேள்வியையே கேட்கலாயினர்.

அங்கயற்கண்ணி உதடுகள் புன்சிரிப்பைச் செய்தன.

அவள் சில சொற்களால் பெரியதொரு செய்தியை வெளியிட்டாள்.

“நாழிகை ஆகிறது! என் காதலர் காத்திருப்பார், எனக்காக. ”

நேற்றும் இப்படிச் சொன்னாள் அங்கயற்கண்ணி! முந்தா நாளும் இப்படிச் சொன்னாள் அங்கயற்கண்ணி.

இதுமட்டுமன்று,

அங்கயற்கண்ணி உள்ளம் அயலெதிலும் செல்லவே இல்லை. அவள்மேல் உயிர் வைத்திருக்கும் ஒருவன்மேல் தன் உயிரை வைத்துவிட்டாள் என்று அனைவரும் சொல் லிக் கொண்டார்கள். தலைவி, ‘கழகம் முடிந்தது’ என்றாள்.