அங்கயற்கண்ணி காதலர் கருத்துக்கு விருந்து செய்ய விரைந்த செல்லுக என்றனர் அனைவரும். அங்கயற்கண்ணி அகன்றாள், அழகைச் சுமந்தபடி! அங்கயற்கண்ணி போய்விட்டாள்; அனைவரும் போய்விட்டார்கள். அஞ்சிலையும் மல்லிகையும் போகவில்லை. அஞ்சிலை மல்லிகையிடம் ஒரு மூட்டையை அவிழ்த்தாள். ‘அங்கயற்கண்ணி நாள்தோறும் காதலர், காதலர் என்று கதைக்கிறாள். அவள் பேச்சில் மெய்யும் இருக்குமோ! ’ மல்லிகை சொன்னாள்; அங்கற்கண்ணி ஒரு தற்பெருமைக்காரி. அஞ்சிலை : இன்றைக்காவது அவள் சொல்லின் உண்மையைக் கண்டறியலாமா? மல்லிகை : நான் பின் தொடர்கின்றேன். நீ இங்கேயே இரு! புகைவண்டி நிலையத்தில் விற்பனை நூல்நிலையம் அழகாகக் காட்சி அளித்தது. பலர் நூல்களும், ஏடுகளும் வாங்கிச் சென்றார்கள். ஓர் அழகிய இளைஞன், சுவடி ஒன்றைத் திறந்து நின்றபடி படித்துக்கொண்டிருந்தான். நூல் நிலையத்திற்கு சிறிது தொலைவில் அங்கயற்கண்ணி முல்லைச் செண்டு விலை பேசிக்கொண்டிருந்தாள். மல்லிகை அங்கு வந்து சேர்ந்தாள். அங்கயற்கண்ணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் காதலன் யார்?-அவள் கண்கள் நாற்புறமும் தேடின. அவன் சுவடியிற் கண்ணையும் கருத்தையும் செலுத்தி நின்றிருந்தான். அவள் முல்லை விலை கொடுத்து வாங்கி, வர வேண்டிய புகைவண்டிமேற் கண்ணையும் கருத்தையும் செலுத்தி நின்றிருந்தாள். |