இந்நூலின் பின்னிணைப்பில் பாரதிதாசனின் கட்டுரைகள் வெளியான இதழ், நாள் பற்றிய விவரமும், கட்டுரைத் தலைப்புகளின் அகர நிரலும் ஆய்வுக்கு உதவும் முறையில் தரப்பட்டுள்ளன. பாரதிதாசன் படைப்புக்கள் பெரும்பான்மையாக வெளிவந்த புதுவை முரசு, டாக்டர் மாசிலாமணி முதலியார் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய ‘தமிழரசு’ ஆகிய இதழ்களின் தொகுப்புகளைப் பல்லாண்டுகளாக நான் தேடி அலைந்தேன். அவ்விதழ்களின் தொகுப்புகள் ஓராண்டுக்கு முன்புதான் எனக்குக் கிடைத்தன. அவ்விதழ்களின் தொகுப்பினைத் தந்த கவிஞர் புதுவை சிவப்பிரகாசம் அவர்களுக்கும் பெங்களூர் திராவிடர் கழகத் தலைவரும், ஆன்ற அவிந்த அறிஞருமான கொடையரசன் அவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழறிஞர் ஏ.கே. செட்டியார், சொற்சுவைக் கவிஞர் சுரதா, நாவலாசிரியர் வே. கபிலன் முதலியோர் இன்று கிடைப்பதற்கரிய பாரதிதாசன் கட்டுரைகளை தந்து உதவினர். அவர்களுக்கும், இத்தொகுப்பு முயற்சிக்குத் துணைநின்ற திருமதி. சிவகாமிஅம்பிகாபதி அவர்களுக்கும் என் நன்றி. தோழமையுள்ள, டாக்டர் ச. சு. இளங்கோ |