பக்கம் எண் :

102

னது வெள்ளியாயிருந்தால் அதையும் கால் காப்பாக மாட்டிக் கொள்ளப் பின்னடையமாட்டார்கள். எந்தப் பொருளும் கூடவராதென்றும் பச்சைக் குத்திக் கொள்வதுதான்! செத்தபின் கூட வருகிறதென்றும் எண்ணிக் கைநிறையக் கால்நிறையக் குத்திக் கொள்வதோடு நெற்றியில் ஜாடியும் அதில் செடியும் இருப்பதுபோல் குத்திக் கொள்வது உண்டு. மணமுள்ள பூக்களைப் புல்சுமைக்குப் பதிலாகத் தலையில் சுமந்து கொள்வார்கள். சாகப் போகும் பெண்டுகளும் திருவிழாவின் பேர் சொன்ன மாத்திரத்தில் தமது அரை டஜன் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு கிளம்புவார்கள்.

கணவனே தெய்வமென்றும் அவன் வார்த்தைகளே தேவாக்ஞையென்றும் எண்ணிக் கணவர்களிடம் தங்களை எருமுட்டைகளாக்கித் தம்மையே தியாகம் பண்ணிக் கொள்வார்கள். மற்றொரு விஷயம்: எங்கள் நாட்டுப் பெண்களிடம் சங்கீதம் பிறந்தது. இங்கிருந்துதான் சங்கீதமென்பதே வெளிக்குத் தெரிந்தது. நடனமும் இப்படியே. சாவு வீட்டில் எங்கள் பெண் மக்கள் ஒப்பனை வைத்து அழுவதையும், அழுது கொண்டே எழுந்து நின்று சுற்றிவந்து மார்பில் அடித்துக் கொள்வதையும் பார்த்தாலே இவ்விஷயம் தெரியும்.

சீதை, துரோபதை, நளாயினி, அருந்ததி, வெள்ளி, சனி, பூரணி, பொற்கிளை, நல்லதங்கை இவர்களின் சந்ததியில் வந்தவர்களே எங்கள் பெண்கள் என்பதை ஓ! இங்கிலீஷ்காரர்களே! நீங்கள் நினைத்துப் பாருங்கள். அப்போதுதான் சுயராஜ்யக் கொடியை இந்தா என்று கொடுத்து, உங்கள் இங்கிலாந்துக்குப் போக நீங்கள் நினைப்பீர்கள்.

- புதுவை முரசு, 20-7-1931

*