25 பால்ய விவாகக் கொடுமை
பெற்றோர் தாம் அரிதிற் பெற்ற சிசுவைத் தீயிற் போட்டு வதைப்பதற்கு ஏதுவாக உள்ள மனோபாவமே, தமது வினவறியாப் பெண்ணை மற்றொருவனுக்கு விவாகம் செய்து கொடுக்க ஏதுவாகிறது. ஒரு தனி மனிதனுக்கு ஏகதேசம் ஏற்பட்டுவிடும் தீமைக்காகச் சமூகக் கட்டுப்பாடுகளையே திருத்தியமைக்க முயல்வதை நாம் அனுதினம் காணுகிறோம். உதாரணம்:- மோட்டார் கார் ஒரு மனிதன்மேல் ஏறிவிடுகிறது. அதன் பின் மோட்டார் விடுகின்ற முறை திருத்தப்படுகிறது. ஆனால், சிறு பெண்களை விவாகம் செய்து கொடுத்த காரணத்தால் பெரும் பெருந் தீமைகள் இன்றுவரை கணக்கற்ற விதமாக நடந்து வருவதைக் கண்டும் அக்கொடுமையினின்றும் மனித சமூகம் தப்பித்துக் கொள்ள வகை தேடாதிருப்பது ஆச்சரியமாகும். கதியற்றவர், கதிகதி யென்று பிறரை அடைக்கலம் புகுவதென்பது வினவறியாப் பிள்ளைகள் தமது பெற்றோரே கதியென்று கிடப்பதுதான். அடைக்கலமாக வந்தவர்களை அவர்களின் எதிரிகளிடம் காட்டிக் கொடுப்பதென்பது வினவறியாத பெண்களை வினவறிந்த காளையர்க்குக் கலியாணம் செய்து கொடுப்பதுதான். பசி மிகுந்தவனுக்கு எதிரிலோ, அன்றிப் பசியே இல்லாதவன் எதிரிலோ வேகாத சாதத்தைப் படைப்பது போல் பெண்ணின்ப வேட்கையுடையவனுக்கோ அன்றி, |