யொன்றை மனைவி கேட்டபோது புருஷன் “அது உன்னிஷ்டத்தைச் சேர்ந்தது; நீயே போய்ப் பார்த்து எடு; அல்லது உன்னிடம் பலரகம் காட்டுகிறேன்; தெரிந்து கொள்” என்று தன் பாரத்தைக் கழித்துக் கொண்டு மனைவிக்குச் சுதந்தரம் கொடுக்கும் ஒருவன், தனது பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் தந்தை தலையிடாதிருக்க வேண்டும் என்ற மனச்சாட்சி ஏற்படுவதில்லை. இந்நாட்டின் பழம் பெருமையில் இது பிரதான அம்ஸம்! ஒரு வயதுடைய பெண்ணுக்கும், 4 - வயதுடைய பையனுக்கும் விவாகம் ஆனதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆபாசம் ஸ்வராஜ்யம் வந்தபின் இல்லாமற் செய்து விடலாம். எப்படி? வயிற்றிலிருக்கும் குழந்தைகட்கே பரிசுத்த மணம் செய்து விடலாம். ஏனெனில் மதம், வருணாச்ரமங்கட்குச் செல்வாக்கும் அவைகளையுடையவர்கட்கும் கையில் வெட்டுக் கத்தியும் அப்போது இருக்கும். பால்ய மணம் என்பது தெய்வ மணம் என்று நேற்றுக் கேள்விப்பட்டேன். பொதுவாகத் தெய்வம் என்பது ஏதோ என்று நினைத்தேன். நேற்றுக்கேள்விப்பட்டபடி தெய்வமென்பது சில மனிதரின் முட்டாள்தனத்தின் பெயராகிறது. சிறு வயதிலேயே விவாகம் செய்துவிட வேண்டும்; அதனால் சிறு பெண்ணின் அங்கங்கள் வளர்ச்சியடையாத முன்பே அவள் குழந்தை பெறும்படி செய்ய வேண்டும் என்று தயவு செய்து சாஸ்திரிகளும் பிராம்மணோத்தமர்களும் உலகில் தக்கபடி பிரச்சாரம் செய்தால் உலக சமாதானத்திற்காக உள்ள நோபல் வெகுமதியைப் பற்றலாம். தென்னாட்டில், பிராம்மணர்கள், கோமுட்டிகள் என்பவர்கள் பால்ய சதிபதிகளிடம் உற்பத்தியானவர்கள். அப்படியானால் இத்தேசமானது இவ்வளவு தாராள உழைப் |