பாளிகளையும், இவ்வளவு தைரியஸ்தர்களையும் கேட்கவில்லை. வயது வந்த மணவாளர் பெற்றெடுத்த சாதாரண வயல் வேலைக்காரர் போன்ற அங்க அமைப்பு, குணம், செயல்களுடைய மக்களே இந்நாட்டுக்குத் தற்காலம் போதும். வயது வந்த பெண் தன் சம்மதப்படி ஒரு மணாளனைத் தெரிந்து கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்பவரின் மூளையும், குழந்தை மணந்தான் நல்லது என்பவர்களின் மூளையும் மொத்தத்தில் முதல் நெம்பர் மூளைகள்தான். ஆனால் புத்திசாலித் தனத்திலோ முட்டாள் தனத்திலோ அதுபற்றிப் பேச்சில்லை. எந்தத் தேசத்தானாவது எங்களூர்ச் சாஸ்திரிகளைக் கேலி செய்தால் நான் சும்மாவிடப் போவதில்லை. தக்ஷணை ஒரு ரூபாயென்று சொல்லி 14 அணா கொடுத்தால் மீதி2 அணாவையும் பெற்றுக் கொள்ளுகிற விஷயத்தில் எங்கள் சாஸ்திரிகளுக்குத் தங்கள் பகுத்தறிவை நன்றாக உபயோகிக்கத் தெரியும். தாய்ப்பாலுண்ணாத சிசுவுக்குக் கருப்பங் கழியைக் கொடுப்பதுபோல் சிறு குழந்தைக்குச் சாஸ்திரிகள் கலியாணம் செய்வதை அத்தனை பெரியதாய் எடுத்துக்கொள்ளக் கூடாது. மகம்மதியர் ஆண்ட காலத்தில் அவர்கள் இந்துப் பெண்களைக் கற்பழித்தார்கள் என்றும், கலியாணமான பெண்ணை அவர்கள் கற்பழிக்க எண்ணுவதில்லையாதலால் குழந்தைப் பருவத்திலேயே மணம் செய்ய ஆரம்பித்ததே இன்றுவரை பால்ய மணத்திற்குக் காரணம் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட இந்தியர்கள் இன்று, “பெற்ற பிள்ளைகளைப் பூச்சிக்காரன் பிடிக்கிறான்” என்று தெரிந்தால், இனி, 1000 வருடத்திற்கு யாரும் பிள்ளையே பெறமாட்டார்கள். . - புதுவை முரசு, 28-9-1931, 5-10-1931 |