31 காந்தீயம் சாக்குருவி தேச காரியத்தை ஏழைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்
யந்திர வளர்ச்சியால் பாரத மக்களுக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. உதாரணமாக, நெல்லுக் குத்தி அரிசி கொள்வதால் ஏழைப் பெண்மக்கட்கு வேலை கிடைக்கும்; நெல்லில் அரிசி எடுக்க வந்துவிட்டபின் அநேகருக்கு வேலையில்லாமல் போயிற்று. இந்த ஞாயமும் உதாரணமும் தக்ளி, ராட்டினம் இவற்றின் மூலம் நூற்ற நூலைக் கொண்டு கைத்தறியால் ஆடைசெய்து உடுத்த வேண்டும் என்று சொல்லும் கதர்க்கோஷ்டியார் சொல்வனவாகும். யந்திரம் என்பது மனிதனின் சிரமத்தை அகற்றுவதற்கென்று அறிவுள்ள மனிதனால் உண்டாக்கப்பட்டது. மனித சமூகம் இந்நாள் மட்டும் யந்திர உதவியை நாடாமல் ஒரு நிமிஷத்தையும் தாண்டவில்லை. மனிதனுக்கு நகம், பல் இருக்கையிலும் அவன் கத்தி முதலிய செய்ய முற்பட்டான். அது போலவே தனிமனிதன் கரும்பு பிழிந்து சாறெடுக்கையிலும் அதிகக் கரும்பை ஏககாலத்தில் பிழிய ஆலை செய்தான். எள்ளைக் கசக்கச் செக்கை உண்டு பண்ணினான். அதிக தான்யத்தையறைக்க யந்திரம் (எந்திரம்) கண்டறிந்தான். அதிக நீர் இறைக்க ஏற்றம் வேண்டியிருந்தது. இதே முறையில் நமது நாடு மாத்திரமின்றி உலகமே யந்திரத்தின் வழியாக முன்னேற்றம் அடைந்து வந்துள்ளது. நமது நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னேயே நல்ல நிலையில் இருந்தது. |