ரோடு ஒருவர் அளவளாவ வழியுண்டா? இவைகட்கெல்லாம் வழி தேடப்பட்டதா? கூடியவரைக்கும் அறிவு வளர்ச்சி முறையில் ஏற்பட்டு வந்த யந்திர வளர்ச்சியுடைய உந்நத உலகில் இன்றைக்கே ஆலை வேலையற்றவர்கள் கையில் தக்ளியைத் தூக்கிக் கொடுத்தால் இனி ஏற்படப்போகும் உந்நத காலத்தில் அவர்கட்குப் பாராங்கல்லைக் காட்டித் தலையை முட்டிக் கொள்ளச் சொல்ல உத்தேசமா? ஏழைகளிடம் பணக்காரர்களும், தலைவர்களும் உயர் ஜாதிக் கிறுக்கர்களும் காட்ட வேண்டிய தயவு அனைத்தும் காட்டியாய் விட்டதா? தயவால்தான் ஏழைகளிடம் தக்ளியைக் கொடுத்துவிட்டு அவர்கள் கண்ணையும் மனத்தையும் பழி வாங்கித் தொலைத்துவிட்டுப் பணக்காரர்களையும், ஜாதிப் பைத்தியக்காரர்களையும் கூட்டிக் கொண்டு, கையோடு கங்கைப் புனலையும் இறந்த மாட்டின் தோலையும் எடுத்துக் கொண்டு சுயராச்சியம் கேட்கப் போக உத்தேசமா? அண்ணே முழுதும் கோணல்! நாட்டுக்கு ஏற்றது செய்ய உத்தேசமானால் செய்வதை ஏழைகளிடமிருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். அதுதான் யோக்கியம். அது தான் வஞ்சமற்ற செயல். வேலையற்றவர்கள் நமது நாட்டில் இருக்கவே முடியாது. இந்நாடு மிகப் பெரிது. அதிற் கருப்பொருள்கள் மிக்க உண்டு. மக்களுக்கு அவைகளின் பயன் தெரியவில்லை. தெரியாதபடி ஆக்கியுள்ளார்கள். கல்வியில்லை. கல்வி பெற வசதியில்லை. வசதி தரவும் மனமில்லை. மனமில்லாமலே இருக்கும்படி சாத்திரம் சொல்கிறது. தன்னிலே தோன்றும் அறிவையும் தடுக்க மூடப் பழக்க வழக்கம் மிக்க உண்டு. அந்த இருட்டுக் கிடங்கில் அடைத்து வைத்துள்ள மக்களைக் கொண்டுதான், அந்த பசிமிக்க சிங்கங்களைக் கொண்டுதான் தேச காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிறேன். அதையும் இன்றைய உந்நத நிலையிலிருந்தே |