பக்கம் எண் :

135

பொது பாஷையாக்கினால் அதிலேயே நமது கவனம் சென்று விடும். சொந்த பாஷையைப் பறக்க விடக் கூடும் என்கிற யோக்கியமான யோசனை, இந்தியைப் பரப்பினாலும் மாகாண பாஷைகள் மறைந்துவிடும் என்பதில் இல்லாமல் போயிற்று ஐயாவுக்கு.

தென்னிந்தியாவிலுள்ள பிராம்மணர் பிராமணரல்லாதார் பேதம் வடநாட்டாரிடம் கலப்பதால்தான் நீங்கும். ஆதலால் வடநாட்டு இந்தியைக் கற்க வேண்டும் என்கிறார்.

தென்னாட்டுப் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றப் பல சூழச்சி செய்து வந்து செல்லாமையறிந்து வடநாட்டாரின் துணைகொண்டாவது குல்லாய் தைக்கலாம், என்று நினைப்பதும் இது விஷயத்தில் இராஜகோபாலாச்சாரி எடுக்கும் முயற்சியும் எமக்குத் தெரியும். உமது சங்கேதப் பசப்பு எமக்குத் தெரியும்.

ஹிந்தியை, இந்திய மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். காசில்லாக் கஷ்டம் தமிழ்நாட்டில் அதிகம். இந்தச் சமயம் கைவேலையாயிருக்கிறது. இன்னொரு வீடு பார்த்துக் கொள்ளுங்கள்.

காகாகலெல்காரருக்கு இரண்டு கேள்வி: தேசம் உருப்பட வேண்டுமென்பதில் உமக்குப் பூரணமான கவலையுண்டா? அல்லது வருணாசிரம தர்மம், புரோகிதம், மதப்புரட்டு, கடவுட் புரட்டு, முட்டாள் வழக்கம், முதலாளிக்காதரவு இவைகளில் கவலையுண்டா? முன்னதில் கவலையுண்டு என்றால் சுயமரியாதை இயக்கத்தால் உமது மூளையையெல்லாம் நன்றாய்க் கழுவிக் கொள்ள வேண்டும். இல்லையானால், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்காது. வைத்ததெல்லாம் வளராது. அவ்வளவுதான்.

புதுவை முரசு, 5-10-1931

*