தோடல்லாமல் ஒற்றுமையைத் தடைப்படுத்தும் எவைகளையும், தேச விடுதலைக்காகத் தகர்த்துப் போடுவோம் என்று கூறுகிறது. சுயமரியாதை இயக்கம் கூறுவது இதுவானால், அதைக் குறை கூறுகிறவர்கள் எதை ஆதாரமாகக் கொள்ளுகிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். சுயநலத்தை ஆதாரமாகக் கொள்வதன்றி வேறொன்றுமிருக்க முடியாது என்பது கண்கூடு. இந்தியாவில் தனி ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு குணம் செயல்களால் ஒன்றுபட்டிருக்க முடியாத வகையில் மூடப் பழக்க வழக்கங்கள், சாதிப் பூசல்கள், மதக் கூச்சல்கள், கடவுள் கிறுக்குகள் உள்ளன என்பது மறுக்க முடியாத விஷயம். எடுத்ததற்கெல்லாம் கடவுள் பெயரை இழுப்பதும், மதத்திற்காகவே மக்கள் என்ற குறுகிய எண்ணமும், மனிதரில் தீண்டத்தகாத மனிதன் உண்டு என்ற இருட்டும் மூன்று வயதில் தாலியிழந்தால் முடிவு வரைக்கும் உயிர்ப்பிணமாயிருக்க என்பது போன்ற அநியாயங்களும் தொலைய வேண்டும் என்ற விஷயம் ஆதிமுதல் பெரியார்களால் பேசப்பட்டே வந்தன. சுயமரியாதைக்காரர்கள் அவைகள் செயற்படும்படி பிரசாரம் செய்கிறார்கள். இப்பிரசாரமானது இன்றைய இந்திய மக்களுக்கு மிக இன்றியமையாதது என்பது அவர்கள் சுயமரியாதைக் கொள்கையில் குதூகலத்தோடு பாய்ந்துவிதை ஆதரிப்பதிலிருந்தேயும் தெரிந்துவிட்டது. இந்தியாவில் அநுதாபமுடைய பிறநாட்டாரும், பொதுவாக மக்கள் முன்னேற்றத்திற்கு வழிகோலும் பேரறிஞரும் உலக முன்னேற்றத்திற்கு இந்தியப் பெருங்குடி மக்களின் முன்னேற்றம் அவசியமென்று நம்பும் அநேக நிபுணர்களும், இந்நாட்டில் லக்ஷக்கணக்கான பெரியாரும் இந்தியாவைப் பற்றிய “பூர்வாங்கமான குறைபாடுகள்” இன்னின்னவை என்று குறித்துள்ளார்கள். அவற்றோடு சுயமரியாதைக்காரர் சொல்லுவதையும் ஒத்திட்டுப் பார்த்தால் இம்மியும் மாறுபடவில்லை என்பதும் ஒரு தலை. |