பக்கம் எண் :

15

2
பெண்களின் சமத்துவம்


நம் நாட்டில் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக்கிடமானது. வேர் தொடங்கி உச்சிக் கிளைவரை முழுவதும் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களின் கேவல நிலைமைக்கு நம்நாட்டு மூடப் பழக்க வழக்கங்களே காரணம் என்று சொல்ல வேண்டும். பெண்கள் திருத்தம் அடைவதைப் பொறுத்தது - நாடு திருந்துவது.

பெண்கள் ஆடவர்களினும் தாழந்தவர்கள் என்ற கொள்கை பழமையானது. இந்தப் பழஞ்சாதம் முன்னேற்றங்கருதும் எவர்க்கும் ஒத்துக் கொள்ளாது; தள்ளிப்போட வேண்டும்.

ராமன் ஆட்சி நடத்திய காலத்து அந்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்ல வந்த ஓர் கவி (ஒட்டக்கூத்தர்) “ஆயிழையார்கள் எல்லாம் ஆண்மகப் பெறுகின்றார்.” என்றான். பெண்டிர் அனைவரும் ஆண்பிள்ளைகளே பெறுகின்றார்கள் என்று இதற்கு அர்த்தம். நம்மவர் பெண்பிள்ளை பெறுதலினும் ஆண்பிள்ளை பெறுதலே சிறப்பு என்று நினைப்பதால் அந்தக் கவி அவ்வாறு சொன்னான்.

ஒருவன் செத்துப் போனதும் அவனைக் குறித்து அவன் மகன் காலமெல்லாம் ஏதேதோ கிரியைகள் செய்ய வேண்டும் என்றும், அக்கிரியைகள் செய்யப் பெண்கள் ஏற்றவர்களல்ல என்றும், நம்மில் இருக்கும் ஒரு கொள்கையால் ஆண்பிள்ளை, பெண்களினும் சிறந்தவர் என்று மதிப்பது வழக்கம்.