38 மனிதரா? சாமியாரா?
(கிண்டற்காரன்) இதென்னையா! இந்த மனிதர் மகாயுத்த காலத்தில் பிராஞ்சு தேசத்தில் என்னோடு பட்டாளத்தில் சேவித்தார். என்னைப்போல்தான் உடை உடுத்திருந்தார்! என்னைப் போல்தான் சுருட்டுக் குடித்தார். என்னைப்போல் துப்பாக்கி சுமந்தார்! என்னைப்போல் எஜமான் ஹால்த்லா என்றால் லடாக்கென்று உஷார் அடைந்தார். இதென்னையா! என்னைப் போல்தான் என்னுடன் யுத்தம் முடிந்ததும் பிரஞ்சிந்தியாவுக்கு வந்தார்! என்னைப் போல்தான் பிரஞ்சு இந்தியா எலக்க்ஷன் என்று கேள்விப்பட்டதும் ஒரு கட்சியை ஆதரித்தார்! என்னைப் போல்தான் இந்த கட்சிதான் ஜெயிக்க வேண்டும் என்று கச்சை கட்டினார்! என்னைப் போல்தான் தம்மை முதல் லீஸ்டு என்று பகட்டிக் கொண்டார்! (முதல் லீஸ்டு என்பது வெள்ளைக்காரருக்கும், வெள்ளைக்காரர் சட்டத்தை அனுசரிப்பதாய் பதிவு செய்து கொண்டவர்க்கும் ஒரு தொகுதியும், மற்ற இந்தியர்க்கு மற்றொரு தொகுதியும் பிரஞ்சு இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது. மேற்படி சிறுபான்மையோர்க்கும் இந்தியராகிய மிகப் பெரும்பான்மையோருக்கும் ஏற்பட்டிருக்கும் பிரதிநிதி ஸ்தானங்கள் மட்டில் சரிபாதிதான். இதனால் வெள்ளைக்காரர் லீஸ்டுக்குப் பிராஞ்சு இந்தியாவில் மதிப்பு அதிகம்.) என்னைப்போல் ஒரு கட்சிக்குத்தான் தமது வாக்குச் சீட்டைப் போட்டார்! என்னைப் போலத்தான் வாக்குச் சீட்டையடைந்த கட்சிக்காரர்களால் லாபம் அடைந்தார்! |