உத்தியயோகத்தில் இருக்கிறார்கள் என்றால் அப்படியானால் நமக்குச் சால்கால் பண்ணச் சொல்கிறார். தேச விஷயத்தைச் சிறிது சீர்ப்பண்ணலாகாதா என்றால் முடியாது என்கிறார். தேசம் சீர்பட்டுப் போனால் நமக்கு நல்லதுதானே என்றால் நமக்கு வருமானமும் செல்வாக்கும் குறையாமல் இருந்தால் நல்லது என்கிறார். சில இடத்தில் சில வெள்ளைக்காரரால் மக்கள் அநீதியடைகிறார்கள் என்றால் கறுப்பர்களுக்கு அத்தனை திமிரா என்கிறார். கறுப்பர்கள் நல்ல நிலைக்கு வருகிறார்கள் என்றால் நாங்கள்தான் அதற்குக் காரணம் என்கிறார். பிரஞ்சிந்தியாவில் இரண்டு லீஸ்டை மூன்றாக்கலாமா என்றால் அதுதான் சரி என்கிறார். நீங்கள் அதற்கு வேலை செய்யுங்கள் என்றால் கறுப்பர்கள் எங்கள் மேல் வருந்துவார்கள் என்கிறார். கறுப்பர்கள் சந்தோஷப்படவும் சுகப்படவும் வெள்ளைக்காரருக்கும், கறுப்பர்கட்கும் ஒரே லீஸ்டு செய்யலாகாதா என்றால் புலி போல் சீறி ஆ! நாங்கள் வெள்ளைக்காரரல்லவா என்கிறார். பொது ஜனங்களுக்கு தந்தை போலிருந்து அவர்களைக் காப்பாற்றும் சாமியார் என்கிறாரே என்றால் நீ வேத விரோதி என்கிறார். வேதம் ஒன்றிருக்க நீங்கள் ஒன்று செய்கிறீர்களே! நீங்கள் வேத விரோதி அல்லவா என்றால் அதெல்லாம் எங்கள் திருச்சபைக் கட்டளை என்கிறார். அப்படியானால் அது அறிவிற்கும் அநுபவத்திற்கும் ஒத்ததாய் இருக்கவில்லையே என்றால் என்ன செய்ய முடியும் என்கிறார். சீர்திருத்தக்காரரை கூப்பிட்டு வந்து பிரசங்கம் செய்யச் சொல்கிறோம் என்றால் எங்கள் வேதம் கற்கோட்டை என்கிறார். நீங்கள் திகில் கொண்ட நேரத்தில் அதைக் கற்கோட்டை என்கிறீர்கள் என்றால் உலகாளும் மன்னரெல்லாம் அழிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள் என்றால் ஜனங்கள் எல்லாம் எங்கள் கட்சி என்கிறார். நீங்கள் பணம் வசூலிப்பதால் ஜனங்கட்கும் உங்கள் மேல் வெறுப்புத்தான் என்றால் மதங்களின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்படாது என்கிறார். |