பக்கம் எண் :

166

மான, சிறந்த மேன்மையான பொற்கமல மலர்த்திருப் பாதங்களில் ....

மண்ணுலகத்திலுள்ள ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த இந்தியா என்ற தேசத்திலுள்ள சென்னை மாகாணத்தைச் சேர்ந்த மதுரை ஜில்லா என்ற நகரிலுள்ள அழகரடி என்ற தெருவிலுள்ள “கிறுக்கன்” என்ற புனை பெயருடைய சிறியேனாகிய நான் தாங்களிருக்கும் வானுலகத்தை அண்ணாந்து பார்த்து மிகமிகமிக வணக்கமாக எழுதிய கடிதம் என்னவென்றால்:-

பக்தர்களின் பரமபிதாவே! இந்த உலகத்தில் இருந்து தங்களுக்கு முதலில் நிருபம் எழுதும் பாக்கியம் பெற்ற மனிதன் நான் என்று எண்ணும்போது உண்மையில் எனக்கு அளவற்ற ஆனந்தமும் தற்பெருமையும் ஏற்படுகின்றன என்பதைத் தாங்கள் அறிந்தே இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். இதுவரை எவராலும் துணிந்து செய்யப்படாத இந்த வேலையில் நான் இறங்கி இருப்பதைப்பற்றி மற்றவர்கள் என்ன எண்ணிக் கொண்டாலும் தாங்கள் என்னை ஆசிர்வதிப்பீர்களென்றே எதிர்பார்க்கிறேன். உண்மையில் நான் உங்களுடைய மெய்யான பக்தனாக இல்லாதவனாக இருந்தும், தங்களுக்கு கடிதம் எழுதியதற்கு தாங்கள் என்னைப் போற்றியே ஆகவேண்டும். மனிதர்களுக்கு கடிதம் எழுதுவதிலேயே எனக்குக் கொஞ்சம் பழக்கம் உண்டு. ஆனால் கடவுளாகிய தங்களுக்குக் கடிதம் எழுதும் தோரணை எனக்குத் தெரியாதாகையால் ஏதோ தங்கள் பக்தர்கள் போற்றும் சில விஷயங்களையே ஆதாரமாக வைத்து மேலே “வக்கணை” செய்து எழுதியிருக்கிறேன். அதில் பிழைகள் இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளனல்லன். ஏனென்றால் தங்கள் பக்தர்கள் கூறியதையே நான் கூறியிருக்கிறேன். மேலும் தாங்கள் மக்கள் முதலிய ஜீவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளையும் தாங்களே உள்ளிருந்து கொண்டு இயக்கி வருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.