வனுக்கு மனைவி ஆனபின் அவள் அவனுக்கு அடிமைப்பட்டு வீட்டில் அடைபட்டுக் கிடக்க வேண்டும்; அவள் பிறரைப் பார்த்தலும் பிறரோடு பேசுதலும் குற்றம் என்று நினைத்துக் கொண்டு வந்ததிலிருந்து உண்டாயிற்று. பெண்டிர்களிடம் ஆடவர் நம்பிக்கை வைத்தல் வேண்டும். வைத்தால் ஆடவரை நம்பிய பெண்களை அவ்வாடவர் மோசம் செய்து திரியும், அவ்வளவு பெண்கள் தம்மை நம்பிய புருஷர்களை மோசம் செய்யமாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கையில் ஆடவர்களைவிடப் பெண்களுக்கே பொறுப்பும் நல்லெண்ணமும் அதிகம். ஆம்! ஆம்! பெண்கள்தான் படித்து அங்கவஸ்திரம் போட்டுக் கொண்டு வெளியூர் சென்று புரட்டிவிடப் போகிறார்களா என்று அடிக்கடி நம் நாட்டவர் கேட்பதுண்டு. நாமும் ஆம், ஆம் ஆடவர் மாத்திரம் படித்து அங்கவஸ்திரம் போட்டுக் கொண்டு வெளியூர்போய் புரட்டியதன் பயனாய் அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் புரட்டியதன் பயனாய் இன்று இந்தியர் என்றால் காறியுமிழாத பிற நாட்டினர் உண்டா என்று கேட்கிறோம். மற்றும் சமர்த்தில்லாத ஒருவனைப் பெண்ணுக்கு ஒப்பிட்டுச் சொல்வதை இந்தியாவில் மாத்திரம்தான் கேட்க முடியும். மற்ற நாட்டினர் பெண்களும் சமர்த்துள்ளவர்கள் என்பதைக் கண்டு கொண்டிருக்கிறார்கள். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினிற் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்!’ என்று கும்மியடி என்னும் பாரதி வாக்கு இங்கு நினைவிற்கு வருகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாத விடாமுயற்சி அன்பு முதலிய குணங்களை ஆடவர்களிலும் பெண்களிடமே அதிகரித்திருக்கக் காணலாம். |