பக்கம் எண் :

171

சகித்தற்கியலாத வறுமையில் உழலும்படி தாங்கள் செய்ததின் காரணம் என்ன? நாயனார்களைப் பற்றி விவரமாக எழுத இங்கு எனக்கு விருப்பமில்லை. மேலும் தாங்கள் எல்லாம் தெரிந்தவர் ஆதலால் நான் குறிப்பிட்டுக் கேட்க விரும்புவதெல்லாம் என்னவென்றால் தங்களுடைய சிறிய பெரிய பக்தர்கள் எதிரிகளாலும், வறுமையாலும் தங்கள் சோதனையாலும் துன்புறும்படியும் இறந்து போகும்படியும் தாங்கள் விட்டுக் கொண்டிருந்ததின் -செய்ததின் காரணங்கள் யாவை? நாயனார்கள் உங்களைப் பற்றி இந்த உலகத்தில் அரிய பிரசாரம் செய்ததாகத் தெரிகிறபடியால் அவர்கள் எக்காலமும் இங்கேயிருந்துகொண்டு செய்யும்படி செய்யாமல் தாங்கள் ரிஷபாரூடராகத் தோன்றி அழைத்துக் கொண்டு போய்விட்டதின் காரணம் என்ன? அறுபத்து மூன்று நாயனாருடன் பெரியபுராணம் சாந்தி ஆகிவிட்டதின் காரணம் என்ன? இவற்றைப் பற்றி நன்றாக விளக்கி விரித்து - விஸ்தாரமாகப் புரியும்படி - தெரியும்படி - தோணும்படி - எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தங்களுடைய மெய்யான பக்தர்கள் என்று சொல்லப்படும் நாயனார்களைத் தாங்கள் பலவாறாகப் பரிசோதித்துப் பார்த்தீர்களாம். அந்த விவரங்கள் பெரிய புராணத்தில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. ஒரு நாயனாரிடம் அவருடைய பெண்ணின் தலைமயிரைக் கேட்டு வாங்கினீர்களாம்; வேறொரு நாயனாரிடம் அவர்களுடைய குழந்தையின் மாமிசத்தை வறுவல் போட்டுத் தரும்படி கேட்டீர்களாம். மற்றொரு நாயனாரை மனைவியை கொடுக்கும்படி கேட்டீர்களாம். இன்னொரு நாயனாரிடம் தங்கள் கோவணத்தைக் கொடுத்து பரிசோதித்தீர்களாம். இன்னும் பல “திருவிளையாடல்களை” த் தாங்கள் நாயன்மார்களிடத்தில் நிகழ்த்தித் தாங்கள் என்றும், அழியாப் புகழ் பெற்று விட்டதாக இங்குள்ள பக்தர்கள் பரவசமடைகிறார்கள். இவற்றையெல்லாம் என்னால் நம்பவோ ஒப்புக் கொள்ளவோ இயலவில்லை. முற்றிலும் “ஹம்பக்”