அறிந்தேயிருப்பீர்கள். கோயில்களில் தாங்கள் இருந்தால் அங்கு நடக்கும் அநியாயங்களையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டோ அநுமதித்துக் கொண்டோ இருக்க மாட்டீர்கள் என்பதை நான் உணர்வேன். கோயில்களில் பட்டர்கள், பூசாரிகள், தரகர்கள் என்பவர்கள் செய்து வருகிற குறும்புத்தனங்களைத் தாங்கள் இதுவரையில் தெரியாமலிருந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். எனவே தாங்கள் சிறிதும் அலட்சியம் செய்யாமல் தக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். பாலாபிஷேகம், கும்பாபிஷேகம், ஆறுகால பூஜை, திருவிழா என்பவற்றின் பேரால் பொருள்களையும் நேரத்தையும் வீணாக்கி அவற்றில் விருப்பமிருப்பதாகவும் கற்பித்துக் கொண்டு கோமாளித்தனமாகச் செய்து வருவதை இனியும் தாங்கள் விட்டுக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் தங்களுக்கே பெரிய ஆபத்தாக வந்து முடிந்தாலும் முடிந்து விடலாம். தங்கள் பேரால் சில பெண்களைத் தேவதாசிகள் என்று பெயரிட்டு, அவர்களைத் தாங்கள் விரும்புவதாகப் பிறர் எண்ணும்படி செய்து, அந்த அறியாப் பெண்களை அந்தக் கோயிலில் உள்ளவர்களும், வேறு சிலரும் பெண்டாண்டு வருகிறார்கள். இது எத்தகைய மானக்கேடு பாருங்கள். இன்னும் அந்தப் படுபாவித் தரகர்கள் செய்து வரும் குறும்புத்தனமான நடவடிக்கைகள் கொஞ்சமா? தாங்கள் பார்வதியோடு படுத்திருப்பது போலும், காலைத் தூக்கிக்கொண்டு சாடுவது போலும் இன்னும் பல வெறுக்கத்தக்க விதமாகவும் தங்க உருவம் செய்து வைத்திருக்கிறார்கள். தாங்கள் செய்ததாகக் கூறப்படுகிற பல அந்தரங்க விஷயங்களையெல்லாம் இங்கு திருவிழா என்பதின் பேரில் வெளியாக்கி மனிதர்களை அறிவிலிகளாக ஆக்கி வருகிறார்கள். தாங்கள் நடத்திய அசாத்தியமான செயல்களைத் திருவிளையாடல் என்று கூறிக் கொண்டு விளம்பரம் செய்து வருகிறார்கள். அவற்றைப் பிற மதத்தார் கேட்டுத் தங்களையும் தங்கள் மதத்தையும் நையாண்டி செய்து வருவதுடன், “இப்படியும் ஒரு கடவுள் இருப்பாரா?” என்றும் கேட்கிறார்கள். |