இவற்றையெல்லாம் கேட்கும்போது கயிறு கொண்டு செத்துப் போகலாமா? என நானே எண்ணிக் கொள்வதுண்டு. எனவே தங்களுக்கு எப்படியிருக்காது என நான் கேட்கிறேன். அந்தக் கோவில்களுக்குள் ஆதிதிராவிடர் என்று சொல்லப்படுகின்ற மக்களை நுழையவும் தங்களை வணங்கவும் விடமாட்டேனென்கிறார்கள். எல்லா மக்களும் தங்களுடைய மக்கள் என்று அந்த அறிவாளிகளே கூறிவிட்டு, ஆதிதிராவிடர் என்பவரை மட்டும் உள்ளேவிட மறுப்பதன் கருத்து என்ன என்பது விளங்கவில்லை. அநேகமாக தாங்கள் இதைக் கேட்டவுடன் திடுக்கிட்டுப் போவீர்கள் என்றே என் புத்தியில் படுகிறது. அப்படியிருந்தால் நீங்கள் இந்த அநியாயத்தை அகற்றிவைக்க உடனே சட்ட திட்டங்களை ஏற்படுத்தும்படி இதன் மூலமாக இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு “ரிப்ளை அட் ஒன்ஸ்” எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பது எனக்குத் தெரியவில்லை! அவ்வளவு சங்கதிகள் இருக்கின்றன. தாங்கள் கேவலம் ஒரு பிடி பிட்டுக்காக மண் சுமந்து பாண்டிய அரசர்களில் ஒருவரால் பிரம்படி பட்டீர்களாம்! என்ன! தேவண்டா! இப்படியும் இருக்குமா? தாங்கள் சாப்பாடு கிடைக்காமல் எங்கெல்லாமோ சென்று பிச்சை எடுத்துப் புசித்தீர்களாம்! தங்களுக்கு பசி முதலிய இயல்புகள் இல்லையென்று சொல்லப்படுகிறபோது அப்படியெல்லாம் ஓட்டைக் கையில் எடுத்துக் கொண்டு “தாயே! பிச்சை கொடு!” என்று அலைந்திருப்பீர்களா என நான் கேட்கிறேன். தாங்கள் நிரம்பவும் ஆவலாக விரும்புவது ஆடன் சாம்பிராணித்தானாம்! இந்தக் கொடுமையும் உண்டா எம்பிரானே? தாங்கள் ஒரு காலத்தில் பார்வதி பிராட்டியாரை அறுபதினாயிரம் ஆண்டுகள் வரையில் அன்னந் தண்ணீரில்லாமல் அநுபவித்தீர்களாம்! அப்போது உங்களிருவருக்கும் அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை! இது உண் |