பக்கம் எண் :

180

தடையில்லை. எனவே உடனே பதில் எழுதுங்கள்! தங்களுக்கு வைப்பாட்டிகூட இருக்கிறாராம். பிறர் மனை விரும்பாதே - எனக் கூறும் தங்களுக்கு இது அடுத்த செயலாகுமோ! அநேகமாய் இது வெறும் பொய்யாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் இதற்கு பதில் எழுதவும். ஒரு பெண்ணை பரிசோதிக்க விரும்பி, தாங்களும் பிரம்மா, விஷ்ணு ஆகியவர்களும், அந்தப் பெண்ணை நிர்வாணமாக இருந்து உணவு படைக்கும்படி கேட்டீர்களாம் இது எப்படிப்பட்ட அருமையான பரீட்சை! தாங்கள் அடிக்கடி ஆட்டம் போடுவீர்களாம்! அப்படியானால் தாங்கள் கூத்தாடி கூட்டத்தைச் சேர்ந்தவரா! தாங்கள் குளிப்பதே இல்லையாம்! அப்படியானால் நீர் கைலாசத்தில் கிடையாதா? தங்கள் ஆபரணங்கள் எலும்புகளும், பாம்புகளும்தானாம்! அப்படியானால் தங்களுக்குக் கைவசத்தில் தங்கம், வெள்ளி, ரத்தினம் கிடைக்கவில்லையா! தாங்கள் நாள் தவறினும் கஞ்சாக் குடிக்க தவறமாட்டீர்களாம்! ‘போதை சாப்பிட்டால் நரகத்துக்குப் போவாய்’ என்பதைச் சைவசமயம் சாற்றுகிறதே! அப்படியானால் தாங்களல்லவோ நரகத்திலிருக்க வேண்டிய ஆசாமியாய், இல்லை! இல்லை!! சாமியாய்த் தெரிகிறது. ஒருசமயம் விஷ்ணு மோகினி (அவதாரம்) யைப் புணர்ந்தீர்களாம்! ஆகா! எத்தகைய அரிய திருவிளையாடல்! தாங்கள் ரிஷி போன்றவராம். அப்படியானால் கனம் விநாயகர், ஆறுமுகன், வீரபத்திரன் முதலியவர்களெல்லாரையும் பார்வதி எவருக்குப் பெற்றார்? இன்னும் இவைபோன்ற சமாச்சாரங்கள் சொல்லப்படுகின்றன. எனக்கு அவையொன்றிலும் நம்பிக்கை கிடையாது. என்றாலும் தங்கள் மூலமாகவோ - எழுத்துவாயிலாகவோ அறிந்து என் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ள விரும்பி இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதினேன். இதன் பிரதியொன்றை புதுவை முரசுவின் விசேஷ அநுபந்தத்திலும் வெளியிட அனுப்புவதற்குத் தங்கள் அனுமதியைக்கோருகிறேன்” என்பதாக ஒரு கடிதம்எழுதலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீ! ஸ்ரீ!! ஸ்ரீ!!!

புதுவை முரசு, மார்ச்சு, 1932