| 
 சர்வகலா சாலையாரால் தயாரிக்கப்பட்டிருக்கும் வருஷாந்தர அறிக்கையிலே மற்ற இலாக்காக்களின் வேலைகள் வெகு செழிப்புடன் மிளிர, இந்தத் தமிழ் (எதற்காக, எந்த நோக்கத்துடன் சர்வகலாசாலை தோற்றுவிக்கப் பட்டதோ அந்தத் தமிழ்) இலாக்காவின் வேலைகளைப் பற்றியோ, ஆராய்ச்சியைப் பற்றியோ, குறிப்புகளின்றி மௌனம் சாதிக்கப்பட்டு விட்டது!! தோழர் மிகவும் வருந்துகிறார்கள். தமிழ் நாட்டுக்கு காட்டப்படும் வஞ்சம், பொறாமை, தமிழர் மாட்டுக் காட்டப்பெறும் கொடுமையுள்ளம் ஆகியவற்றை எண்ணுந்தோறும் தமிழறிஞர் வருந்தாது இருக்க முடியாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க்கலையை அடியோடு அழிப்பதற்கு உதவியான ஒரு கலை கண்டறியப்பட்டிருக்கிறது என்பதும் அதுதான் தமிழைப்பற்றி வருஷ அறிக்கைகளில் பிரஸ்தாபியாமல் இருப்பது என்பதும் எனக்குப் புலனாகிறது. ஆனால், தோழர் உமாமகேஸ்வரம் அவர்களை நான் ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். சில நாளாக இந்த பிரச்சாரக் கூச்சல் கிளப்பப்பட்டதன் நோக்கமென்ன? தமிழ் அன்னைக்கு தார் சூடவா? தமிழ்த்தருவின் வேருக்கு வெந்நீர் ஊற்றவா? சுயராஜ்யச் சொக்குப் பொடியால் ஹிந்தி பாஷைக்கு வேண்டிய ஆதரவு தேடப்பட்டபோதே நான் அறிவேன், தமிழ் தலைகவிழ்க்கப்படும் என்பதை, இங்கிலீஷ், சங்கீதத் தெலுங்கு, சம்ஸ்கிருதம், இந்தி முதலியவைகள் இனியும் பொன்னே போல் போற்றப்படும். ஏன்? தமிழை ஒழிப்பதற்காக! இதற்கு அண்ணாமலை என்செய்வார்? பல்கலைக் கழகம் என்ன செய்யும்? நிர்வாகம் யார் வசத்திலிருக்கிறது என்பதையும், நிர்வாகஸ்தர் கொள்கை என்னவென்பதையும் அறிந்தால் ஆச்சரியப் படத் தக்கது ஒன்றுமிராது. தமிழ் என்னும் எருது அதன் பகையெனும் சிங்கத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அச்சிங்கத்தின் பிடரி பற்றி மோத வேண்டியது தமிழர் கடன். |