தோழர், உமாமகேஸ்வரம் கீழ்வருமாறு முடிவு கட்டியிருக்கிறார்: “தமிழர்கள் தங்கள் தாயாகிய தமிழ்த் தெய்வத்தை கவனியாவிட்டால் தாயைக் கொன்ற பாபமல்லவோ சம்பவிக்கும்.” கரந்தைப் புலவர் மேற்படி தமது பிரசங்க வாயிலாகத் தமிழ் மொழியானது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கவனிக்கப்படாதது பற்றி மிகவும் ஆத்திரப்பட்ட உள்ளத்தோடு பேசியுள்ளார்கள். இயற்கை முறையில் அவ்வாத்திரத்தின் முடிவு தோன்றாதது பற்றி நான் வருந்துகிறேன். தமிழ்த்தெய்வத்தை கவனியா விட்டால் தாயைக் கொன்ற பாவம் சம்பவிக்கும் என்று மட்டும் முடித்துக் கொண்டார்கள். பணம் பறிகொடுத்தோன் அதை மீண்டும் பெறத்தக்க முயற்சி செய்தலே இயற்கை முறை: பணத்தை போக்கடித்தால் பாவம் உண்டாகும் என்று மாத்திரம் முடிவு கட்டுதல் இயற்கைக்கு முரண். தோழர் உமாமகேஸ்வரத்தைப்போல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழுக்காக ஆத்திரம் அடைந்தோருண்டு. அவர்கள் எல்லோரும் உமாமகேஸ்வரத்தைப் போலவே தாயைக் கொன்ற பாவம் என்று சொல்லியதோடு நின்றதால்தான் தமிழ் வளர்ச்சி பிரஸ்தாபம் அற்றதாகி வருகிறது. தமிழைப் பகை என்பவன் எவன்? ஏன் அவ்வாறு நினைக்கிறான்? அவனுக்கென்ன அத்தனை பலம்? நாம் ‘தமிழர்களாயிற்றே’ பகைவர்களுக்கு நற்புத்தி கற்பிப்போம். தமிழைக் காப்போம் என்று உமா மகேஸ்வரம் இறங்கட்டும் சமர்க்களத்தில்! உமா மகேஸ்வரம் சமர்க்களத்தில் இறங்கட்டும். அவர்கள் உடலில் தமிழ் ரத்தம் பாய்கிறது. தமிழாவேசம் நெஞ்சில் அலையாடுகிறது. மேலும் சுயமரியாதை இயக்கத்துணை அவர்கட்குக் காத்திருக்கின்றது! |