இதையெல்லாம் விட்டுத் தமிழைத் தெய்வம் என்று சொல்லி அதைப் பிறர் கொல்ல விட்டுவிடாதீர்கள் என்று சொல்லுவதனால் என்ன பயன்? இப்படிச் சொல்வதனால் தமிழ்த் தெய்வத்தை அழிக்கும் அண்ணாமலை சர்வகலா சாலை நிர்வாகஸ்தார் அத்தமிழ்த் தெய்வத்தின் தண்டனையை ஏற்கட்டும் என்று நினைத்துத் திருப்தி அடைவதாயும் நான் நினைக்க இடமேற்படுகிறது. நிர்வாகஸ்தர்கள் நமது தமிழை தெய்வமென்று நினைக்கவில்லை. தமிழ் தமிழரின் உயிர் என்றே அந்தப் பகைவர்கள் அறிந்துள்ளனர். தமிழைத் தமிழர் விழி என்பதும் அவர்கட்குத் தெரியும்; தமிழ் தமிழர்க்கு வெற்றி என்பதும் அவர்கட்குத் தெரியும். அதனால்தான் தமிழை அழிப்பது தமிழரை அழிப்பதாகும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். ஆனால் உமாமகேஸ்வரம் அவர்களை மட்டும் தமிழ் என்பது தெய்வம் என்று நினைக்கும்படி செய்துள்ளார்கள். அந்தத் தெய்வத்தை வணங்கிக் கொண்டு காலங்கழிக்கட்டும் என்ற ஏற்பாட்டையும் செய்துள்ளார்கள். நம்மிடம் அறிவுப்புரட்சியை யுண்டுபண்ணி அவர்கள் காரியத்தைச் செப்பனிட்டுக் கொள்ளுகிறார்கள். தோழர் உமாமகேஸ்வரம் உணரவில்லை போலும். தமிழரைத் தமிழ் என்று மாத்திரம் நினைத்து அதை அழிக்கும் நாத்திகரை - தமிழைத் தெய்வம் என்று நினைக்கும் ஆத்திகத்தால் எதிர்க்க வழியில்லை. தமிழ் எங்கள் பொருள் என்றும் கூறுகின்ற நாத்திகச் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் எதிர்ப்பதே நேர்வழியாகும். புதுவை முரசு, 14-3-1932 * |