பக்கம் எண் :

196

போல் இந்த காமாட்டிப் பசங்கள் ஏழைகளைத் தினம் தினம் ஏமாற்றி ஏமாற்றி எப்படியோ பணத்தைச் சேர்த்தார்களே ஒழியப் பாடுபட்டதும் இல்லை. படுவதுமில்லை, படப் போவதுமில்லை என்ற பெரும்பான்மை ஏழை மக்களின் அபிப்பிராயம் யாருக்கு அநுகூலமானது? ஆஸ்திகர்களுக்கு அநுகூலம் செய்யுமா? மடாதிபதிகட்கு அனுகூலம் செய்யுமா? நமது கடமை என்ன? மேற்படி அபிப்பிராயங்களுக்கு வத்தி வைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதானே! முதலாளிகள் அம்மிகளாயிருக்கட்டும்; புதைத்த செக்குகளாயிருக்கட்டும். வேர்விடுமா? நகர்ந்து தானே தீரவேண்டும்!

தேசீயத்தைப் பார்த்தார்கள். அந்தத் தேசீயத்தை முன்னின்று நடத்திய தேசபக்தர்களைப் பார்த்தார்கள். ஏழை மக்கள் என்ன முடிவுக்கு வந்தார்கள்? கீர்த்தியோ லாபமோ படங்களோ அனைத்தும் முதலாளிகட்கும், பழைய மண்வெட்டியும் கூடையும் ஏழைகட்கு ஏற்படுவதை அறியாமலா இருக்கிறார்கள்? தேசபக்தப் பத்திரிகைகள் ‘சி.பி. சாமியின் தியாகம்’ என்று கொட்டை எழுத்தால் போடட்டும்! வாசிக்கும் மனிதர்கள் அதை நேராக வாசிப்பதை விட்டுத் தலைகீழாகப் புரட்டிச் சி.பி. அவர்கள் முன்பெல்லாம் 1000 ஏழையர் ரத்தத்தை உண்டு வந்தார். இப்போது பதினாயிரம் ஏழைகளின் ரத்தத்தைப் புனல் வைத்துச் சாய்த்துக் கொள்ளுகிறார் என்றுதானே வாசிக்கிறார்கள்.

அஞ்சுதல் வேண்டாம்! பின்செல்ல வேண்டாம்! ஜயம் உண்டு! நம் கடன் இடையறாது பணியாற்றலே!

குடியரசு, 26.3.1933; 7:1-3.