பக்கம் எண் :

197

45
அன்பே சிவம் என்பது ஆத்திகர் கரடி


சிவம் சிவம் என்று சொல்லிச் சொல்லி வயிறு வளர்த்த சோம்பேறி பசங்கள் சிவம் என்ற பதத்திற்கு வேண்டியவரைக்கும் கௌரவத்தை உண்டு பண்ணிவிட்டார்கள். சிவம் என்பது ஆக்க வல்லது. காக்க வல்லது. அழிக்கவல்லது. ஆகையால் அதற்குத் தரகர்களாகிய எங்கள் கால்களில் விழுங்கள். நீங்கள் பாடுபட்டதைக் கொண்டுவந்து கொடுங்கள். நாங்கள் விலாப்புடைக்க தின்று தின்று கொழுக்கிறோம். நரகத்துக்கும் மோக்ஷத்துக்கும் தலைமை வகிப்பது இதே சிவம்தான். ஆகையால் நரகத்திற்குப் போகாதிருக்க சிவத்தின் கூட்டத்திற்கு அடிமையாகி வாழுங்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி நாளடைவில் நிலங்களையும் காசையும் சோம்பேறிகள் கைப்பற்றினார்கள். இதனால்தான் ஆரம்ப காலத்தில் பொதுவாக இருந்த உடைமையையும் ஒரு சாராரிடம் அடையலாயிற்று. இதனால்தான் பெரும்பாலான மக்கள் நாளடைவில் ஏழைகளாகித் தவித்தார்கள்.

ஆயினும் இந்த முதலாளிகள் காலக்கிரமத்தில் பெரும்பான்மைத் தொழிலாளரான ஏழைகட்கு அஞ்சத் தலைப்பட்டார்கள். ஏன்? கூட்டமாகக் கூடிவந்து தமது பசிக்கொடுமை நீங்குவதற்காக முதலாளிகளை உதைத்துப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ளவும் கூடுமல்லவா? இதற்காக முதலாளிகளாகிய ஆத்திகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?