பக்கம் எண் :

199

தோன்றி நான்கு வருணத்தையும் பிரசவ வேதனையின்றி முகம், புயம், தொடை, கால் ஆகிய இடத்தினின்று வெளிப்படுத்தித் தொழிலாளர்கள் கஞ்சிக்குக் கேடாக உழைக்கும் நிலையிலே இருக்க வேண்டும். சோம்பேறிகள் ஏமாற்றித் தின்னும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற பேதத்தை சாஸ்வதப்படுத்தினார். இப்படிப்பட்ட பிரச்சாரம் எவ்வளவு தூரம் வலிவடைந்து மக்களின் மூளையைக் கலக்கிவிட்டது எனில் ஏழுமலையான் பேரைச் சொன்னால் குடியானவன் பெண்டாட்டி தாலியறுக்கவும் முடிகிறது. திருப்பதியில் காணிக்கை போட்டபின் அதற்குப் பதிலாக பார்ப்பான் செருப்பால் அடிக்கையிலும், கோவிந்தா என்று தலையைக் குனிந்து காட்டும் நிலையும் ஏற்பட்டது. உலக மக்களில் 100க்கு 90 பேர் ஏழைகளாகவும் மீதிப்பேர் உலக உடைமைக்கு அதிகாரிகளாகவும் கால ரீதியில் ஆத்திகமும், அரசாங்கமும் செய்து கொண்டே வந்துவிட்டன. ஆயினும் ஏழை மக்களைக் கொள்ளையிடும் இந்தக் கூட்டத்தினர்க்குள்ளே நாளடைவில் சிறிது மனத்தாங்கல் உண்டாவது சகஜமாகும்.

ஏனெனில் ஆட்சி செலுத்துவோரிடம் படைபலம் இருப்பதால் கரடிவிடும் கூட்டத்தினராகிய புரோகிதர், குருக்கள், மடாதிபதிகள் ஆகியவர்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. இதனால் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்ற ஆசையும் பிறந்தது. எனவே தமது ஆத்திகச் சொக்குப் பொடியைப் படைபலம் கொண்ட ஆள்வோர் மீதும் தூவிவிடவும் கச்சை கட்டினார்கள். கடவுட் பிரச்சாரம், மத வழிபாடு, பெரியார் வழிபாடு, ஆத்ம சக்தி முதலிய வலைகளை ஓயாது வீசினார்கள். நாளடைவில் உலக மக்கள் ஒருவர் தவறாமல் அந்தக் கிணற்றில் விழுந்தார்கள். போப்புக் கூட்டமும், மடாதிபதிக் கூட்டமும், சங்கராச்சாரி கூட்டமும் இன்று உலகைக் குரங்குபோல் ஆட்டி வைக்கிறார்களா இல்லையா? உழைப்பு என்பதே கொஞ்சமும் இல்லாமலேயே கோடானுகோடி பணத்திற்கு, அதிகாரிகளாகவும், படைபலம் மிகுந்த ஆள்வோராகவும்,