பக்கம் எண் :

200

அடக்கிப் பிடிப்பவர்களாகவும் விளங்குகிறார்களா, இல்லையா?

இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஏமாற்றுங் கூட்டமும், ஏமாறுங் கூட்டமும் உலக ஆரம்ப முதலே இருந்து வந்தன. ஏமாற்றுங் கூட்டத்தார் கருவியாக ஏற்படுத்திய கடவுள் கொள்கை மதக்கொள்கைகளும், புராதீனமானவைகளே. ஆயினும் ஏமாறுவோரிடம் சலுகை காட்டும் கட்சிகள் அவ்வப்போது தோன்றாமலும் இல்லை. அக்கட்சிகளில், ‘பிறரிடம் அன்பு பாராட்டல்’ என்னும் கொள்கையானது ஏமாற்றுக்காரருக்குச் சண்டமாருதம் என்று தோன்றியிருக்கலாம். ஏனெனில் அந்த வார்த்தை ஏழை மக்களையெல்லாம் ஒன்றுபடுத்திவிடும் என்று அவர்கட்குத் தெரியும். அதனால் அன்புப் பிரசாரத்தை எதிர்க்காமல் அதைத்தாமே மேற்போட்டுக் கொண்டார்கள்.

அன்பு நெறியை ஓங்க விட்டார்களா? அதை வேரோடு கிள்ளிப்போட்டார்கள். எப்படி? கொள்ளைக் கூட்டத்திற்கு முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவு தந்து வரும் கடவுள் அன்பின் உருவமாயிருக்கிறார்கள். அன்பே சிவம் என்று சொல்லிவிட்டார்கள். அது முதற்கொண்டு தான் இந்தப் பாழான உலகத்தில் அன்பு என்பது ஏழை மக்கள் முதலாளிகளிடமும், கடவுளிடமும் காட்டுவதுதான் என்று முடிந்தது. பணக்காரன், புரோகிதன், அரசாங்கம் ஆகிய இந்தக் கூட்டம் எப்போதாவது ஏழை மக்கள்பால் அந்த அன்பைச் செலுத்தினதாக எங்காவது, யாராவது காண்பிக்க முடியுமா? ஆத்திகர் விட்ட கரடிகளில் அன்பே சிவம் என்பது அசல் கரடியாகும்.

குடி அரசுபக்., 11-12, 9-4-1933

*