48 காலிகள்
தமிழ் நாட்டில் தமிழர்கள் எல்லாம் காலிகள், சுயமரியாதைக்காரர்கள்! படித்தவர்கள் எல்லாம் காலிகள் - ஆரியர் பஞ்சாங்கப்படி! வட நாட்டில் வங்காளத்தில் இருக்கும் போஸ் கட்சிக்காரர்கள் எல்லாம் காலிகள், முஸ்லீம்கள் எல்லாம் காலிகள், ஆதி திராவிடர் அனைவரும் காலிகள் - காந்தீயர்களின் அட்டவணைப்படி. ஆந்திர தேசத்தில் ஆந்திர மாகாணம் கேட்பவர்கள் அனைவரும் காலிகள் - ஆச்சாரியார் அகராதிப்படி! இது மாத்திரமல்ல, காரே போன்ற நீதிமான்கள், அவர்கள் கட்சிக்காரர்கள் எம்.என்.ராய் போன்றவர்கள், அவர்கள் கட்சிக்காரர்கள், சுதேச அரசர்கள், அவர்களை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் காலிகள் - காந்தியின் ஜோதி சொன்னபடி.. திருவாங்கூர் காங்கிரஸ்காரர்கள் காலிகள், கொச்சி திவான் ஒரு காலி-விகடன் திட்டத்தில்! மறியல் செய்பவர் காலிகள், பட்டினி கிடப்பவர் காலிகள் - படேல் நியாயப்படி. வரியை எதிர்ப்பவர்கள் காலிகள் - மூர்த்தியின் எண்ணப்படி. இந்தியை எதிர்ப்பவர்கள் காலிகள், கொடிய சட்டங்களை வெறுப்பவர்கள் காலிகள், நீதி நிர்வாகப் பிரிவினை கோருபவர் காலிகள் - ஆச்சாரியார் நீதி சாஸ்திரப்படி. காங்கிரஸுக்கு எல்லாரும் காலிகளாய்த் தெரிவதால் இனிக் காங்கிரஸ் காலிதான் போலிருக்கிறது. தமிழரசு, 15-2-1939 |