பக்கம் எண் :

209

து இது குறில்; தூ இது நெடில். து இது குறில் தூ இது நெடில் என்றால் ஏன் பொருந்தாது - இப்படிச் சிலர் கேட்கிறார்கள்.

எழுத்தின் வரி வடிவத்தைச் சிக்கனப்படுத்தும் முறை பற்றி உங்கள் கருத்தென்ன என்று சிலர் நம்மைக் கேட்டார்கள். குயிலில் சொல்லுவதாகச் சொன்னோம்.

சொன்னோம். சொல்லுகிறோம். ஆயினும் நம் கருத்தை யாரும் ஒப்பமாட்டார்கள். ஒப்ப மாட்டார்கள் என்பதற்காக நாம் சொல்லாமல் இருப்பதுண்டா? - கிடையாது.

நாம் சொல்லும் முறையைக் கையாண்டால் - டைப் ரைட்டிங் மெஷினிலும் எழுத்துப் பெட்டி அறைகளிலும் 31 எழுத்துக்கள் போதும். ஒத்துக் கொள்ளுகிறவர்களின் நிலைமைதான் சரியாயில்லை.

க என்பது ஓர் எழுத்தல்ல. க் என்பதும் அ என்பதும் சேர்ந்தது க. இப்படியேதான் உயிர்மெய் 216ம்.

பை என்பது ஓர் எழுத்தல்ல. ப் என்பதும் ஐ என்பதும் சேர்ந்ததுதான் பை.

க என்று ஓர் எழுத்து வேண்டாம். க் அ என்றே குறிக்கலாம் என்கிறோம்.

கண்ணன் என்று எழுத வேண்டுமானால் க்அண்ண்அன் என்று குறிக்க.

விசிறி என்பதை வ்இச்இற்இ என்று குறிக்க வேண்டும். இந்த முறையை மேற்கொண்டால் உயிர் 12, மெய் 18. ஆய்தம் 1 ஆக 31 எழுத்துக்கள் போதும். எல்லாவற்றையும் எழுதி விடலாம். இந்த 31 எழுத்தால், இப்படி எழுதுவதால் ஒரு வரியில் மிகப்பல எழுத்துக்கள் போட வேண்டும் என்று கூறலாம். அப்படியில்லை. சில எழுத்துக்களே அதிகமாகின்றன.