பக்கம் எண் :

21

இஷ்டம் என்று அவர்கள் நினைப்பதால்தான் தங்கள் பெண்களை மூன்று நான்கு வயதிலேயே தங்களுக்குச் சரியென்று சொல்லக் கூடிய நொண்டிக்கோ நொள்ளைக்கோ கிழவனுக்கோ விற்றுவிடுகிறார்கள். அல்லது இனாமாகக் கொடுத்து விடுகிறார்கள். இதனால்தான் அந்தக் கணவன் அந்தப் பெண்மணியைத் தனக்கு அடிமையென்று சொல்லச் சாத்தியப் படுகிறது. புல் ஆனாலும் புருஷன்; கல் ஆனாலும் கணவன் என்பது பழமொழியாம். அறிவுடைய பெண் தன் புருஷன் அடி முட்டாள் எனினும் அவன் சொல்லுகிறபடியே அவள் கேட்க வேண்டும். மறுத்துப் பேசினால் உலகு நகைக்குமாம்.

பால்ய மணம் மிக்க நல்லது என்று சொல்லுபவர்களைப் பற்றி நாம் ஒன்றும் பேச முடியாது. அவர்கள் மிக்க பெரியோர்கள்; தாங்கள் பெற்ற பெண்களிடத்தும் பற்று அற்ற பரம யோகிகள்.

பருவ மணம் செய்யும் இயல்புள்ள பெற்றோர்கள் தங்கள் பெண்ணுக்கு நல்ல ஆஸ்தி தேடுவதிலும், பணக்கார மாப்பிள்ளை தேடுவதிலும் செலுத்தும் கவனத்தை அவள் ஊமையாகாதிருக்கச் செலுத்தினால் நலமாகும். பருவமடையும் தருணத்தும் அடைந்த பிறகும் பெண் தாய் தந்தையரிடம் தனது உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டுச் சொல்லும்படி சிறுவயது முதலே பழக்கி வர வேண்டும். இதுவே பெண்ணுக்குப் பெற்றோர் செய்ய வேண்டியவைகளிற் ப்ரதானம் ஆகும். எந்தப் பெண் பெற்றோரிடம் தன் ஆசைகளைத் தெரிவிக்க வில்லையோ அவள் தன் வாழ்நாளில் துன்பத்தையே அனுபவிக்க நேரும். உள்ளக் கருத்தைத் தானே வெளியிடாத பெண்ணைப் பெற்றோரும் முனைந்து அவள் உள்ளத்தைத் தடவ வேண்டும்.

இப்படிச் செய்தால் மாத்திரம் போதாது. பெற்றோர்கள் தங்கள் பெண்களைச் செவிடுகளாகவும், குருடுகளாகவும் ஆக்கக் கூடாது.