பக்கம் எண் :

22

பருவப்பெண்கள் வெளியில் உலாவவும் எல்லாரோடும் கலந்து பேசவும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். இதனால் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பவர்கள் உள்ளே அடைத்து வைப்பதால் அபாயம் ஏற்படுவதில்லையா என்பதையும் மற்றும் அதிலுள்ள கஷ்டங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பருவ மாதர்கள் வெளியிற் போகும் வழக்கம் கிராமங்களில் இன்றைக்கும் உண்டு. அதனால் அங்கு முழுகிப் போனது ஒன்றுமில்லை.

ஏறக்குறைய பதினான்கு வயதில் ஒரு பெண் பருவமடைவதாய் வைத்தாலும் அதற்குள் அப்பெண் படிக்கும் படிப்பு அறிவு விருத்திக்குப் போதுமா? பெண்களை மறைத்து வைப்பவர்கள் அப்பெண்கள் விஷயத்தில் வெளியாரைக் கவனிக்கக் கூப்பிடுகிறவர்களாகவே ஆகிறார்கள். அடைபட்டுக் கிடக்கும் பருவப் பெண்தான் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் தேடுவதன் மூலமாகக் கேட்டுக்குரிய எண்ணங்களை அடையவும் கூடும்.

மகன் விவாகம் ஆகியும் படிப்பதுண்டு; அதுபோல் மகளும் பருவமடைந்த பின்னும் விவாகமான பின்னும் படிக்க ஏன் இடங்கொடுக்கக் கூடாது?

குழந்தைக் கலியாணம் தீர்ந்து பருவப் பெண்ணைப் படிப்பிலும் வெளியிற் சஞ்சரிப்பதிலும் ஆண்பிள்ளைகள் போலவே நடந்து கொள்ளும் நிலையேற்பட்டால் பெண் ஒருத்தி தானே தனக்குப் பிடித்த ஒருவனைக் குறிப்பிடும் நிலைமையும் உண்டாகும்.

உருப்படாத ஆசாமிகளை மாப்பிள்ளைகளாக்கப் பெற்றோர்கட்கு அப்போது மனமும் வராது. இந்தப் பொறுப்பும் பெற்றோரை விடும். அவள் தான் தேடிக் கொண்ட கணவன் சகிதம் குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்துவாள்; அவள் காலமெல்லாம் தன் பெற்றோர் தகாதவனைத் தனக்குத் தேடினார்கள் என்று பழிக்கவும் இடமிராது.