இப்போதுகூட மலையாளத்திலிருந்து இங்கு வந்து சாப்பாட்டுக் கடை வைக்க எண்ணுவோர் அனைவரும் தம்மை நாயர் என்று கூறிக் கொள்வதில்லையா, நாயரில்லாதவர்கூட? பிழைப்புக்காக! சில நாளின் முன்பு சில பார்ப்பனர், தாங்களும் தமிழரே என்றார்கள். முற்போக்குப் பார்ப்பனர் அப்படிக் கூறவில்லை. ஏன்? பார்ப்பனர்களுக்கு எல்லாம் கையில் வந்துவிட்டதே! ஏன், தம்மைப் பார்ப்பனரும் தமிழரே என்று ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும்? முற்போக்குப் பார்ப்பனர் மாநாட்டினர் இராஜகோபாலாச்சாரி, கோபாலசாமி ஐயர் முதலியவர்களின் திறமையைத் தமது சாதிப் பெருமையாகப் பேசியிருக்கிறார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியைச் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? அவர் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்றார். சூத்திரனுக்கொரு நீதி, தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்றார். பாரதியாரின் கருத்துக்களுக்கு மாறாக, அறத்திற்கு மாறாகப் பேசிக் கூத்தடிப்பவர் பாரதியாரை நமக்கு நினைப்பூட்டவும் ஒப்பாரல்லவா? திராவிடக் கழகத்தார் நினைத்திருந்ததெல்லாம் இதைத்தான் - பார்ப்பனர் நேரே வெளிவர வேண்டும். தம்மைத் தமிழர் என்கிறார்கள். ஆரியர் இல்லை என்கிறார்கள். ஆரியரே நாங்கள் என்கிறார்கள். குழப்பிக் குழப்பிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெருமக்களை ஏமாற்றுகிறார்கள். முற்போக்குப் பார்ப்பனர் கூட்டத்தைத் திராவிடர் கழகம் வரவேற்கிறது. ஓர் ஐயப்பாடு என்னவெனில், பிற்போக்குப் பார்ப்பனர் என ஓர் அனாமத்துக் கூட்டமும் இருக்கிறதோ? அது எது? சரியான முகவரி இருந்தால் மிக்க நலம். நான் சொல்ல நினைத்ததை இன்னும் சொல்லவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் திராவிடர் என்று திராவிடர் கழகம் சொல்லவில்லை. |