பக்கம் எண் :

221

ஆனால் திருடியது தெரியக்கூடாது. அசைகளை மாற்றிக் கொள்க. தெரிந்து விட்டால் பட முதலாளி பாட்டின் முதலாசிரியரின் முகவரியைத் தெரிந்து கொள்ள நேரும். எழுத்தாளரின் வருமானத்தில் மண்விழும்.

எவர் எழுதியதையும் பார்க்காமல், இருக்கும் கையிருப்பைக் கொண்டே பாட்டு எழுதித் தொலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்பொழுது எழுத்தாளர்களுக்குத் தெரிந்த மட்டமான சொற்களையோ மட்டமான கருத்துக்களையோ வைத்துப் பாட்டு எழுதிவிட அஞ்சுதல் கூடாது. முதலாளிகளில் எவராவது ஒருவர் முட்டாளாயில்லாமலும் இருக்கலாம். அவர் இதென்ன மட்டமாக இருக்கிறதே என்று கேட்டால் அப்போது தான் பணம் வரும் என்று ஒரு போடு போட்டு விட வேண்டும். எழுத்துப்பிழை, சொற்பிழை, பொருட்பிழை - நல்ல வேளையாய் எழுத்தாளர்க்குத் தெரியாமல் இருந்தால் அதைப் பெருமையாகக் கொள்ளவேண்டும்.

(4) பொதுநெறி - இந்தத் தமிழ் நாட்டு மக்கட்குத் திரைப்பட எழுத்தாளர் காட்ட வேண்டிய பொது நெறிகள் இரண்டு உண்டு. ஒன்று பெரியார் நெறி மற்றொன்று இராசகோபாலாச்சாரி நெறி. முன்னது தமிழர் நெறி; மற்றது ஆரிய நெறி.

இவற்றில், பெரியார் கொள்கையால் பெருமை தேடிக் கொள்ள வேண்டும். ஆரிய நெறிக்கே அடிமைப்பட வேண்டும். ஏனென்றால், ஏதுங் கெட்ட ஆரியர்தாம் நம்மைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடக்கூடும் அதிலும் நம் எழுத்தாளர் கூட்டத்தில் ஆரியனுக்குப் பிறந்தவனிருந்தால் அவனுக்கு முதன்மை கொடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நான்கும் இன்றியமையாதவை எழுத்தாளர்களுக்கு!

குயில், 28-10-1958

*