பக்கம் எண் :

227

(இ) உலகிலுள்ள பன்னாட்டுத் தத்துவங்கள், கலைகள், இலக்கியங்கள், மொழிகள் இவற்றைத் தேடி ஆராய்ச்சி செய்கின்ற நிறுவனங்களில், நம் தமிழ்மொழி இலக்கியங்கள், கலைகள், தத்துவங்கள் சேர்க்கப்பட வேண்டுமே என்று எந்தத் தமிழன் கவலை கொண்டான்?

(ஈ) இவைகளைச் செயற்படுத்த எவ்வகை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையன்றோ?

(உ) சமஸ்கிருதம் என ஒரு மொழி இருந்தது என்று காட்ட வேண்டி, மிகக் கவலையோடு அந்த மொழியைப் பேசப் பழகிக் கொண்டவர்கள் இன்று எத்தனை பேர்கள் என்று கணக்கெடுத்ததில் இத்தனை பெரிய துணைக் கண்டத்தில் ஆயிரம் பேர்கள்கூட அகப்படவில்லை. இருந்தால்தானே! தமிழ் அப்படியா? நான்கு கோடி தமிழர்களின் மூச்சும் பேச்சும் தமிழைவிட்டு இம்மியும் அசைந்ததில்லை. சாகாத் தமிழுக்கு தமிழகத்தில் எத்தனைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன? உலகிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றிலேனும் உலக முதன் மொழியாகிய நம் தமிழ்மொழி பற்றிய பேச்சு உண்டா?

தமிழக மக்கள் பேரால் உலகப் புகழ் பெற்றுள்ளவர்களில் ஒருவர்க்காவது இதில் எள்ளத்தனைக் கவலை இருந்ததா?

(ஊ) உலகு தொடங்கியது முதல் இன்றுவரை பல படையெடுப்புகளுக்கும் சாகாது உயிரை வைத்திருக்கும் தமிழர் தலைமுறையைக் காப்பாற்றத் தமிழ்க் கல்விக் கழகங்களைத் தமிழகத்தில் அடிக்கொன்றாக விரிவுபடுத்துவதும் அக்கழகங்களில் இந்தி முதலிய கொடிய விலங்குகள் புகாது பார்த்துக் கொள்வதும் தமிழர்களின் இன்றியமையாத கடமையன்றோ? இவ்வகை மொழிப் போர் நீடிக்க - வெற்றிபெற என்ன செய்தார்கள், தமிழ்ப் பெருஞ் செல்வர்களும், தமிழ்ப் பெரும் கல்வி வல்லாரும்?