(எ) தமிழாராய்ச்சி வல்லார் தமிழகத்தில் இல்லாமல் இல்லை. தமிழைப் பரப்பும் நோக்கமுடைய ஆற்றலினர் இல்லாமலில்லை. அவர்களைத் தமிழ்ப் பற்றிய இவ்வகைப் பெருநோக்கத்தில் ஒன்றுபடும்படி செய்வதன்றோ செய்யத்தக்கது. புறஞ்சொல்லிப் பகை விளைத்தலா செய்யத் தக்கது? (ஏ) பழந்தமிழ் நூல்களை உரைத் தூய்மை செய்தும் தமிழின் தொன்மை மேன்மைகளை விளக்கும் புதுத் தமிழ் நூற்களையும், அவை பற்றிய ஏடுகளையும், இதழ்களையும் பிறர் கட்டுப்பாட்டுக்குட்படாதபடி - வெளியிட முன் வர வேண்டாமா? (ஐ) தமிழகத்தில் தமிழர்களால் ஏற்படுத்தப்படும் கண்காட்சிகள் ஆண்டுதோறும் அளவற்றவை திறக்கப்படுகின்றன. தமிழன்னை, தமிழ் நாகரிகம், பண்பாடுகளின் மேம்பாடுகள் காட்சியளிக்கின்றனவா அவற்றில்? இந்த நினைவேனும் இருந்ததாகத் தெரிகின்றதா, தமிழ்த் தலைவர் உள்ளத்தில்? தமிழனின் தச்சுத்திறனும், இசைக்கலைத் திறனும், ஓவியத் திறனும் வரிசைப்படுத்தப்படுகின்றனவா எங்கேனும்? (ஒ) பெரிய தமிழ்நூல் நிலையங்கள் தமிழகந்தோறும் உண்டாக வேண்டும் என்றும், தமிழ் நூற்கள், அயல்நாட்டு நூற்களிலும் இடம்பெற வேண்டுவது இன்றியமையாதது என்றும் தமிழ்ப் பெரியோர் எண்ணி ஆவன செய்ய வேண்டும். இருக்கும் நூல் நிலையங்களில் தமிழரின் மேற்பார்வையே நிலைக்கச் செய்ய வேண்டும். (ஓ) தமிழர் தத்துவங்களையும் தமிழின் தொன்மை மேன்மைகளையும் உலகமெல்லாம் சென்று பரப்பத் தமிழ்ப் பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் ஏற்படுத்தி தமிழ் படிப்பாரை உலக முழுவதும் ஏற்படுத்த வேண்டும். |