பக்கம் எண் :

229

(ஒள) உலகெங்கணும் பரவலாக உண்டாக்கப்படும் தமிழ் விரும்பினரைக் கொண்டு பெரிய பெரிய தேர்வுகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றோர்க்கு உலகப் புகழ் பரிசுகள் வழங்க வேண்டும். தமிழ் என ஒன்று இருப்பதாகவே இன்று அயல் நாட்டினர் எண்ணவில்லையே. அவ்வாறு எண்ணாதபடி தமிழரின் பகைவர்கள் செய்கின்றார்களே! செத்த மொழி இருப்பதாக அவர்கள் காண்பிப்பதில் நமக்கு வருத்தமில்லை. இருந்தும் மொழி செத்ததாகச் செய்யப்படும் முயற்சியை விட்டுவைக்கலாமா?

(க) தமிழுக்கென ஓர் பெரு நிறுவனத்தை நிறுவ நினைத்தால் இன்று நம்மிடமிருக்கும் தமிழ்ச் செல்வர்களால் தமிழ் வல்லுநர்களால் முடியாது போய்விடுமா? அவ்வாறு ஒரு நிறுவனத்தை நம் தமிழ்த் தாய்க்கு ஆக்குவதும் அதன் கிளை நிறுவனங்களை உலகெங்கும் நிறுவுவதும் இன்று தமிழர்க்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எண்ணிய மறுகணத்திலேயே வெற்றியடையக் கூடியதல்லவா?

(கா) தமிழர் நாகரிகம், தமிழின் தொன்மை மேன்மை மாய்ந்து மண்ணாக வேண்டும் என்று பகைவர் எண்ணி வரும் இந்நாளில் மேற்சொன்னவரெல்லாம் தொண்டாற்றுவதில் பெருமுயற்சி செய்து கொள்ள வேண்டுமன்றோ? தூங்குகின்றார்கள்.

பாருங்கள் இவர்களை!

குயில், 16-6-1959

*