பக்கம் எண் :

243

விடை: இல்லை. ஏற்றத்தாழ்வு எப்போதும் இருக்கும். அறிவு அறியாமை அகல முடியாதவை. வறுமையும் செம்மையும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். இரப்பானும் ஈவானும் இரப்பதும் ஈவதும் எப்போதும் இருக்கும். இந்த இரண்டில் ஒன்று வேரற்றுப் போவதென்பது முடியவே முடியாது.

கேள்வி: சமயங்கள் சாற்றுவதெல்லாம் அறியாமையை நீக்குவதற்காகத்தானே?

விடை: எந்தச் சமயமாவது எந்த இடத்திலாவது அறியாமையை நீக்கிற்று என்றால் அது தனி மனிதனிடமிருந்த அறியாமையைப் பற்றியது. உலகின் அறியாமை முதலற்றுப் போக வழி சொல்லும் நூல் - கல்வி இயக்கம் தோன்றியதில்லை; தோன்றப்போவதுமில்லை. அதுபோலவே உலகில் வறுமை வேரற்றுப் போக வழி சொல்லும் நூல், கல்வி இயக்கம் இருக்கவே முடியாது. இருக்கலாம் என்றால் அந்த வறுமையை முழுதும் - ஒழிக்கவே முடியாது.

இதை நான் மட்டும் சொல்லவில்லை. தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். திருவள்ளுவர் இதுபற்றிச் சொல்லும்போது இன்னும் ஒருபடி தாண்டி விடுகின்றார்.

இரப்பவர் உலகில் இல்லாவிட்டால் மக்களின் நடைமுறையில் சுவை இராது என்கிறார். இதனால் இரப்பார் இருப்பர். இல்லாமற் போகார். இல்லாமல் செய்ய முடியாது என்று வைத்து அப்படி அவர்கள் இல்லாவிட்டால் உலக மக்களின் போக்குவரவு - நடைமுறை மரப்பாவை போவதும் வருவதும்போல இருக்கும். சுவையற்ற வாழ்க்கையாய் முடியும் என்று கூறுகின்றார்.

“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று” - குறள்

என்பது காண்க.