பெற்றதாகவும், அந்த நாவலின் சாறு ஒழுகிப் பெருகும் இடத்தில் கிடைப்பதுதான் சாம்பூநதம் என்னும் பொன் என்பதாகவும் அந்நூல் விரித்துரைக்கும். இவை வழக்கில் இல்லையாதலால் இவை பற்றிய ஆராய்ச்சியும் தேவையில்லை. பொன் மண்ணில் கிடைப்பது. பொலிவுடையது, அழகுடையது, ஒளியுடையது, மாசில்லாதது என்பவை மட்டும் பொன்னுக்குச் சிறப்பாக அமைந்தவை என எண்ணிவிட வேண்டாம். பொன், வெள்ளி, இரும்பு முதலியவைகளைவிட எடையுள்ளது; நயப்புடையது. பொன், பொலிவு முதலியவற்றையும் எடையையும், நயப்பையும் உடையதாதலின் அது மதிப்புடையது என்பது மறத்தல் கூடாது. பொன்னின் பயனை இந்நிலம் அறியும். அதன் விலை உலகில் உள்ள பொன்னின் அளவைக் கொண்டு மதிப்பிடப்படும். பொருள்களில் நெல் முதலிய பயன்படு பொருள்கள் எல்லாம் காலத்தால் நிலைகெடும்; சீரழியும். ஆனால் பொன் சீர்கேடு, நிலைகேடு அடைவதே இல்லை. ஓர் அரசு எதைக் கொண்டு மதிப்புப் பெறுகின்றது எனின், அந்த அரசில் இருக்கும் பொன்னின் அளவைக் கொண்டேயாகும். ஓர் அரசில், ஒரு நாட்டில் ஒரு கோடி மூட்டை நெல் இருக்கலாம். அதுகொண்டு அந்நாட்டை மதிப்பிடுவதில்லை. பொன் இருப்பைக் கொண்டுதான். மன்னரும் பிற மக்களும் பொன்னகை பூண்டு தம் அழகுக்கு அழகு செய்வார். பொன்னைவிட மேலானவை வயிரம், முத்து, பவழம், மாணிக்கம், பச்சை வைடூரியம், கோமேதகம் என்று கூறுவார். இதை ஒத்துக் கொள்ள முடியாது. இவையும் தம் பெருமைக்கு வேலியாகப் பொன்னையே எதிர்பார்த்துக் கிடக்கும். |