அறிந்து கொள்ள முடியவில்லை. டாக்டர் அவர்கள் உருசியச் செலவு பற்றியும், அங்கு பேசிய பேச்சுக்கள் பற்றியும் இவ்வளவுதான் வெளியிட்டாரோ என்னமோ? அவர்கள் தமிழர்கள் பண்பாட்டின் உயர்வை உருசியாவில் நன்கு எடுத்து விளக்கினார் என்பதில் ஐயமில்லை. திருக்குறள் தமிழரால் போற்றப்படுவதற்கு, உள்ள காரணங்கள் சிலவற்றையும் அவருக்கு நேரம் கிடைத்த வரைக்கும் விளக்கினார் என்று எண்ணுகின்றோம். ஊழ் என்பதற்கு மதக்காரர்கள் கொண்ட பொருள் வேறு; திருவள்ளுவர் கொண்ட பொருள் வேறு, மதக்காரர்கள் ஊழ் என்பதை முற்பிறப்பு ஒன்று இருந்தது. பிற்பிறப்பும் உண்டு என்பதை வலியுறுத்தப் பயன்படுத்தி வந்தனர். அதற்காக அவர்கள் செய்து வந்த விளம்பரங்கள் மிகப் பெரியது. எனினும் அது அருவருக்கத்தகுந்தது. மணிமேகலை புண்ணியராசனைக் கையோடு மணிபல்லவத்துக்கு அழைத்துப்போய் நீ முற்பிறப்பில் ஆபுத்திரனாய்ப் பிறந்தாய். நீ இறந்த இடமும் மணிபல்லவந்தான். உன்னைப் புதைத்த இடமும் இதோ இதுதான். அதுமட்டுமல்ல, புதைத்த இடத்தையும் தோண்டி எடுக்கின்றேன். இதோபார், இந்த எலும்புக் கூடுகள் உன்னுடையவையே என்று கூறி என்புக்கூட்டை அவன் மூக்கில் அடிக்கிறாள். இது அளவு கடந்த காட்டுமிராண்டித்தனம். ஆனால் இவை அனைத்தும் மணிமேகலை ஆசிரியரின் மத விளம்பரமே தவிர மெய் என்பது கடுகளவும் இல்லை. முற்பிறப்பில் கொள்கையை நம் பண்டைய சமயக் கணக்கர்கள், தமிழர்கள் மானம் கப்பலேறும்படி முழக்கம் செய்து வந்தார்கள். இதைத் திருவள்ளுவரும் பின்பற்றினார் என்றால் திருவள்ளுவரும் காட்டுமிராண்டிகளில் ஒருவர்தாம். |