திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதிவழியே செல்லவே யில்லை. எங்கும் எதிலும் அவ்வாறிருக்க அவர் சமயக் கணக்கர் கொண்ட பொருளிலேயே ஊழ் என்ற அதிகாரத்தையும் இயற்றி, ‘ஊழ் சிறிது - முயற்சி பெரிது’ என்று காட்டும் வகையில் மற்ற அதிகாரத்தையும் இயற்றுவாரா? டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் முயற்சியினால் (சமயக்காரர் கூறும்) ஊழையும் வெல்லலாம் என்று உருசியர்களின் நடுவே கூறினார் என்றால் அது கேட்கும் உருசியர்கள் மக்களுக்கு ஆகாத ஊழைத் திருவள்ளுவர் ஏன் சொல்ல வேண்டும் என்று மனக்குழப்பம் அடைய நேரும். ஊழ் என்ற சொல் சட்டம் என்பதுதான் பொருள். முறை என்றுதான் பொருள். அதைவிட்டு, முற்பிறப்பில் ஒருவன் செய்த பாவத்தையோ புண்ணியத்தையோ தன் நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு செத்தபிறகு அவன் செய்த பாவ, புண்ணியத்தின் பயனை அவன் அடையும்படி செய்கின்ற ஒரு தெய்வம் என்ற வரிகள் ஊழ் என்னும் சொல்லில் அடங்கியா இருக்கின்றன? ஆனால் சமயக்காரர் திருவள்ளுவரிடம் வந்து துடைதட்டினால் அவற்றைப் பொருட்படுத்துவாரா திருவள்ளுவர்? மக்கள் பிறப்பில் நால்வகை என்பதை உலகம் கிழியக் கத்துகின்றது பல நூல்கள். அந்நூற்களின் பொய்க் கூற்றுக்களைச் செலாவணியாக்க இலக்கக்கணக்கான தலைகள் உருண்டிருக்கின்றன. இந்த நாவலந்தீவில் வாளேந்திய மன்னர்களையெல்லாம் அந்த சாதிக் கொள்கையை ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டன! எவற்றையும் பொருட்படுத்தவில்லை வள்ளுவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!” என்று அருளினார். இவ்வாறு பல. ஊழ் என்பது தமிழ்ச் சான்றோரால், துறந்தோரால், நீத்தோரால் அருளிச் செய்யப்படும் சட்டமே என்று திட்ட |