வர்கள் அந்த சட்டத்தைத் துறக்க வேண்டும். அதாவது சட்டத்தை உடைக்க வேண்டும். அதாவது புரட்சி செய்ய வேண்டும் என்பதுதான் பொருள்! இதைவிட்டுப் பரிமேலழகர் என்னும் சமயக்காரர் எழுதும் பொருள் பொருந்துகிறதா என்பதைப் பாருங்கள்! உறற்பால ஊட்டா கழியுமெனின், அடையத்தக்கவற்றை அடைவிக்காமல் செல்லுமாயின் (ஊழ்த்தெய்வம்) அந்த ஏழை மக்கள் உயிரைத் துறக்க வேண்டும். ஏழை மக்கள் கட்டிய வரிப்பணத்தை அரசன் மூல பண்டாரத்தில் அப்படியே விட்டு, அவைகளைப் பணக்காரருக்கே கொட்டியழும்படி விட்டு இவர்கள் ஒரு முழக் கயிற்றைத் தேடி எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ஆலமரக் கிளையில் தூக்கிலிட்டுத் துடித்துச் சாக வேண்டும் என்ற பொருளிலா வள்ளுவர் செய்யுள் அருளிச் செய்வார்? இன்னும், ஊழ் பற்றிய திருவள்ளுவரின் பத்துக் குறட்பாவிற்கும், அது சட்டம் என்று வைத்துப் பொருள் காணுங்கால் பொருந்துவதையும், பிரார்த்துவம் என்று வைத்துப் பொருள் காணுங்கால் பொருந்தாமையையும் உய்த்து உணர்க! தமிழர்கள் இனியும் உருசியரும், பிறரும் தமிழ்க் கருத்துக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போதெல்லாம் டாக்டர் போன்ற தமிழ் மறவர்கள் தக்கவாறு விளக்கம்தரப் பின்னடைய மாட்டார்கள். குயில், 13-9-1960 * |