“நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”
எனக் கூறுமாற்றானும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களின் வடிவ வேறுபாடு கூறுதலானும் ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே கல்லில் பொறிக்கும் பழக்கம் இருந்தது என்பது தெரிகிறது. பொருது வீழ்ந்த மறவர்க்குத் தவிர அரசர்கள் தம் பெயரும் பீடும் எழுதித் தமக்கும் கல்நாட்டினர் என்ற வழக்குப் பழைய தமிழ் நூல்களில் காணப்பெற்றிலது. இமயமலைவரை சென்று தமது வெற்றிக்கொடியை நாட்டிய இமயவரம்பன் சேரலாதன், கரிகாற்சோழன், சேரன் செங்குட்டுவன் என்னும் வேந்தர்களின் வரலாற்றைப் பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் உணரப்படுகின்றோமேயல்லாமல் அவரவர் செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுக்களை இதுகாறும் கண்டிலோம். தலையாலங்கானத்து மாற்றலர் எழுவரைப் பொருதழித்த நெடுஞ்செழியனாவது. ஆரியரை வென்ற நெடுஞ்செழியனாவது கல்வெட்டுக்கள் ஏதும் பொறித்ததாகக் கண்டிலோமில்லை. எனவே இவ்வாறு நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மாபெரும் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் அறவே காணப்படாமை என்னவென்று ஆராயுமிடத்து அதற்கு இரண்டு ஏதுக்கள் புலனாகின்றன. முதலாவது அற்றை ஞான்றிருந்த பேரரசர்கள் தம்முள் பொருதாராயினும் வேற்றரசர்களுக்கு இடங்கொடாதிருந்ததால், பெருகிய ஒற்றுமையும், பேராற்றலும் உடையராயிருந்தார். தமது அரசு வேற்றாரால் கெளவப்பட்டு நிலைகுலையும் என்பதைக் கனவிலும் அவர் நினைத்திலர். அதனால் அவர்கள் காலந்தான் அழிந்தது. நிலைத்து நிற்கவல்ல கல்வெட்டுக்களை அவர்கள் வெட்டுவித்திலர். இரண்டாவது: |