பண்டுதொட்டே தமிழ் வேந்தர் மூவரும் செந்தமிழ்ப் பயிற்சியைப் பெரிதும் வளரச் செய்து இங்ஙனம் கொடை கொடுத்தலும் இயலுமோ எனப் பிறர் வியப்புற்று வியக்குமாறு கொடை வழங்கிப் புலவர்களைப் பேணி குடிமக்களும் உவப்புற வாழுமாறு அரசோச்சி வந்தனர். இதனால் கற்றவர் தொகை பெருகி, ‘பதிற்றுப்பத்து’ போன்ற அளப்பரிய நூற்கள் தோன்றி அவ்வேந்தர்கள் தம் பெயரும், பீடும் உரைத்து அவற்றை மங்காமற்றுலக்க வைத்தனர். இதனாலே அவர்கள் கல்வெட்டுக்கள் செதுக்கி வைக்கும் கருத்தே இலராயினர். சேர சோழ பாண்டியரென்னும் மூவேந்தர்கள் பண்டைய நாளில் பேராற்றல் உடையவராய் இணையின்றி விளங்கினர் என்பதை இந்தியாவின் பெரும் பகுதியையும் விறல் கொண்டு அரசோச்சிய அசோகன் தன் ஆற்றலால் அடிமைப்படுத்த முடியாத பேரரசர்கள் தம் நாட்டின் தெற்கின்கண் உள்ளனர் என அவன் தனது பதினான்கு கல்வெட்டுக்களில் இரண்டாவது, பதின்மூன்றாவது கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இங்ஙனம் நாட்டின் பெரும் பகுதியையும் கைப்பற்றி ஒருங்காண்ட பேரரசனுக்கு உட்படாமல் தனியரசு செலுத்திய ஆற்றலும், அறிவும், செல்வமும் சிறுபகுதியை ஆண்ட இம் மூவேந்தர்களுக்குத் திடுமென வந்திருக்க முடியாது. இத்திறம் கைவர பன்னூறாண்டுகள் கழிந்திருக்க வேண்டும். இங்ஙனம் சிறப்புள்ள தமிழகத்தில் பழைய கல்வெட்டுக்கள் காணப்படாமைக்கு தமிழ் நூற்கள் மிகுந்திருந்ததையும், அழிவுக்கு இடமான மாறுதல் நிகழாமையுமேயாம்! மற்றும் வட நாட்டிலோ எனின், ஆரியர் வந்து நுழையத் தொடங்கிய காலந்தொட்டு, ஆசிய ஐரோப்பாவிலிருந்து பல்வேறு கொடிய பிரிவினரும் ஒருவர்பின் ஒருவராய்ப் புகுந்து, சூறையாடியும் உயிர்க்கொலை செய்தும், மாதரைக் கற்பழித்தும், நாடு நகரத்தைக் கொளுத்தியும், கோயில்களைத் தகர்த்தும் பெருந்தீங்கு விளைவித் |