பக்கம் எண் :

276

66
தெய்வமிகழேல்


‘தெய்வத்தை இகழாதே!’ என்பது இதன் பொருள். இது ஔவை வாக்கு!

தெய்வம் வழிபடு - தெய்வம் போற்று என்னாமல் இகழேல் என்றது என்னவென்று கூறுவேன்.

இகழத்தக்க பகுதி தெய்வம் என்பதில் உண்டு. அதனால்தானே தெய்வத்தை இகழாதே என்றார் அம்மையார்.

தெய்வம் என்பதில் இகழத் தக்க பகுதி எது? தெய்வம் என்ற சொல்லின் சொந்தப் பொருளை மட்டும் நோக்கினால் தெரியும். தெய்வம் - கொள்ளுவது (விழுங்குவது) சொல்லுவது! “தெய் என் கிளவி கொள்ளலும் கோறலும்’ என்ற பிங்கலத்தையும் காண்க! தெய் என்பதன் அடியாகப் பிறந்ததே தெய்வம்! ‘தெய்’ முதனிலை; ‘அம்’ பெயர் இறுதி நிலை. “வ்” பெயர் இடைநிலை.

தெய்வம் என்பதை வடசொல் என்று கூறிப் பிழைப்பர் வடசொற் சார்பினர். யகரத்தின்முன் வகரம் மயங்கும் என்று கூறியது தொல்காப்பியம். தெய்வம் என்பதையே எடுத்துக் காட்டாகக் கூறினார், உரை ஆசிரியர். இதனால் தெய்வம் தூய காரணப் பெயர். இல்லையா?

தெய்வம் என்பது விழுங்குவதும் சொல்லுவதுமான ஒன்றின் பெயர் என்பதால் இகழத் தக்க பகுதி அதில் இருத்தல் பெறப்படும்.