69 இன்ப வாழ்வு
புரட்சிக் கவியின் அழகு நடையும் அரிய கருத்தும் கண்டு களித்திருக்கிறீர்கள். கவிதை மட்டும் அல்ல; உரைநடையும் உயரிய உயிரூட்டும் வகையுள்ளதாக அமைந்திருப்பதை அறிவிக்க இதோ அவருடைய வசனம்! வசனத்திலேயும் அந்த வசீகரவாசம் வீசக் காண்பீர்கள். -பேரறிஞர் அண்ணா வாழ்வு என்பது உயிர் வாழ்தல். அது பிறப்பு இறப்பு இந்த இரண்டின் இடையில் உள்ளது. வாழ்வின் பயன் இன்ப வாழ்வு வாழ்தல். இதன் மற்றொரு முனை துன்ப வாழ்வு. உயிர்கள் இயல்பாக விரும்புவது இன்ப வாழ்க்கையே. துன்ப வாழ்க்கை உயிர்களுக்கு எட்டிக்காய். இன்ப வாழ்வை அடைய வழி எது? இது உலக மக்களில் பெரும்பாலோரின் கேள்வி. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்தரம் ததும்பும் உள்ளம் வேண்டும். அதன்பிறகு வெற்றி. அதன்பிறகு இன்ப வாழ்வு. இன்னொரு முனை நமக்குத் தெரிந்ததுதான். பேதம் - விரோதம் - பந்தம் - இவை உள்ளத்தில் இடம் பெற்ற நிமிஷத்தில் எட்டிக்காய் வாழ்வு வந்து சேரும். |