பக்கம் எண் :

283

அரசு; அன்றி ஓர் ஏழைக்குடி; இருவரும் மனிதர்; மக்களின் சந்தர்ப்ப பேதத்தால் ஏற்படும் நிலையை நீக்கிப் போட்டு ‘அனைவரும் மக்கள்’ என்று கொள்ளும் தன்மை ஒப்பு எனப்படும். சமத்துவம் - ஒப்பு இரண்டும் ஒரே அர்த்தம்.

உலகம் ஒரு தாய். உலக இன்பம் தாயின் திரு முலைப்பால்; பாலுண்ணத் தாவும் மக்களின் மாறுபடாத மனோபாவம் உடற்பிறப்பு எனப்படும். சகோதரத்துவம்- உடற்பிறப்பு இரண்டும் ஒரே அர்த்தம்.

உலகம் பொது. உலக இன்பம் பொது. மக்கள் தமக்குரிய இன்பத்தை அடையத் தடங்கலின்றி விடுபட்ட தன்மை விடுதலை - விடுதலை சுதந்தரம்.

ஒப்பு - உடற்பிறப்பு - விடுதலை! நினைத்துப் பாருங்கள் - இந்நிலையடைந்த மக்கள் இன்ப வாழ்க்கையின் எல்லை காண்பர்.

ஒரு தன்மை வாய்ந்த மக்கள்பால் உயர்வு. தாழ்வு பாராட்டுவது மாறு, மாறு என்பது பேதம். ‘தனக்குண்டு பிறருக்கு இல்லை’ இது பகை. பகை விரோதம். மனிதன் மனிதனுக்குக் கட்டுப்படல் கட்டு. கட்டு - பந்தம்.

சமத்துவம் (ஒப்பு)பேதம் (மாறு)
சகோதரத்துவம் (உடற்பிறப்பு)விரோதம் (பகை)
சுதந்தரம் (விடுதலை)பந்தம் (கட்டு)

மாறு, பகை, கட்டு இவைகளில் அகப்பட்ட மக்களின் நிலை துன்ப வாழ்வு. அது சாக்காட்டின் ஒட்டு.

மக்களுக்கு ஏழ்மை ஒரு சந்தர்ப்பம். செம்மை ஒரு சந்தர்ப்பம். எழுச்சி ஒரு சந்தர்ப்பம். சோர்வு மற்றொரு சந்தர்ப்பம். அறிவு, மலர்ச்சி, அறிவு, ஒழுக்கம் ஒவ்வொரு சந்தர்ப்பங்கள்! மக்களின் ஏழ்மை செம்மையாதல் உண்டு. சோர்வுற்ற உள்ளம் எழுச்சியடைதல் உண்டு. மழுங்கிய அறிவு ஒளிபெறுவது உண்டு.