பக்கம் எண் :

289

71
தமிழின் வெற்றி எங்கிருக்கிறது?


விஞ்ஞானம் முதலிய பாடங்களைத் தமிழில் கற்பிக்க முடியாது என்று சொல்லுகின்றார்கள்; அப்படி சொல்லுகின்றவர்கள் தமிழர் நலத்தில் நல்லெண்ணம் உடையவர்களா என்று பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி ஆகவேண்டும் என்றால் ஆகமுடியாது என்பதற்கான காரணங்களைத் தேடுவதில் காட்டுகின்ற சுறுசுறுப்பை ஆட்சிமொழி ஆக வேண்டியதற்குக் காட்டுவதில்லை அவர்கள்.

தமிழில் கலைச்சொற்கள் இல்லையாம், விஞ்ஞானச் சொற்கள் இல்லையாம். தமிழில் எந்த ஏட்டில் கலைச்சொற்களும் விஞ்ஞானச் சொற்களும் இல்லையோ அந்த ஏட்டை விரைவாகத் தேடிக் காட்டுவார்கள் ஆதாரமாக.

திருச்சியில் தமிழ் ஆட்சிமொழியாக வைக்கப்பட்டது மாதிரிக்காக. அப்படி வைக்கப்பட்ட காலத்தில் ஆட்சிப் பொறி ஒரு குழறுபடியான நிலையில் இருந்தது. தமிழை ஆட்சிமொழியாக வைத்தவர்கள் தமிழ் ஆட்சிமொழியாயிருக்கத் தகுதியற்றது என்ற கோள் விண்ணப்பங்களையும் உருவாக்கினார்கள்.

கலைச்சொற்கள் தமிழில் கண்டு பிடிக்கத் தனிக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதே குழுவில் தமிழின் பகைவர்களையும் கணிசமான முறையில் சேர்த்திருந்தார்கள். உருப்பட்டதா முயற்சி?