பக்கம் எண் :

290

விஞ்ஞானம் முதலிய பாடங்களைத் தமிழில் சொல்லிக் கொடுக்க முடியாது என்பது போன்ற கதைகள் கதைப்பவர்கட்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதை ஊன்றி நோக்க வேண்டும்.

காட்சி என்பது சரியல்லவாம்; காக்ஷி என்று போட வேண்டுமாம்; ஆட்சி என்பது சரியல்லவாம். ஆக்ஷி என்று போட வேண்டுமாம். மாட்சி, சூழ்ச்சி என்பன பிழையாம். மாக்ஷி, குக்ஷி எனல் வேண்டுமாம். இத்தகைய பாழ்படுத்தும் உட்பகை இந்த நாட்டில் இருந்து கொண்டுதானே இருக்கிறது..

எந்தத் துறையில் தமிழர்க்குப் பகைவர் இல்லை?

தமிழ் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கலாகாதாம். தனிமொழி அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது சரியல்லவாம். தத்தி விளையாட எண்ணும் தவளைகளை - தமிழர்களை ஒழித்துக் கட்ட எத்தனை விரியன் பாம்புகள்!

“தமிழின் அடிப்படையில் தமிழ்நாடு பிரியவேண்டும்; தமிழ் ஆட்சிமொழி ஆதல் வேண்டும்” -இந்தத் தமிழிசை தமிழர்கட்கு எவ்வளவு இன்பத்தை உண்டாக்கின! விலாப்புறத்தில் வேல் கொண்டு தாக்குதல்போல இதை எதிர்த்த அறிஞர்கள் எத்தனை பேர்? இதை எதிர்த்த கட்சிகள் எத்தனை?

விஞ்ஞானச் சொற்களும் கலைச்சொற்களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன என்று சொல்ல வரும் அறிஞர்கள், அச்சொற்கள் ஆங்கிலத்தில் எப்போது தோன்றின என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.

விஞ்ஞானப் பொருள்களும், கலைப்பொருள்களும் உண்டான பின்பே விஞ்ஞானச் சொற்களும் கலைச்சொற்களும் உண்டாயின. புதுப்பொருள்களுக்குப் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் கிடைக்கும்; தமிழில் கிடைக்கமாட்டாவோ?